அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே வன்முறைகள் உருவாக வாய்ப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Sep 12, 2024, 7:45:18 AM
எதிர்வரும் 21ஆம் திகதி நடக்க உள்ள ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே வன்முறைகள் உருவாக வாய்ப்பு இருப்பதாகப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் தற்போது தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லையெனில் வன்முறைகளை தூண்டும் பேச்சுகளை வெளியிடுகின்றனர். இதனைப் பார்த்து தேர்தலின் பின்னர் சமாதானத்தை பேண உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறினால் அவர்களது நியமனம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னர் தேர்வு மனுவின் மூலம் ரத்துச்செய்யப்படலாம் என சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்தார். வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பதவிபிரமாணம் செய்த பிறகு தான் அதிகாரங்களைப் பெறுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகள் இதுவரை பதிவாகவில்லை. இருப்பினும் தேர்தல் ஆணைக்குழு நடைமுறையிலுள்ள சட்டங்களை மேலும் கடுமையாக அமுல்படுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.