நவீன மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேசம் கருதப்படும்" ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!
ஊடகப் பிரிவு
UPDATED: Sep 14, 2024, 10:38:49 AM
அரசியலில் நவீன மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேச சபை கருதப்படுமென மன்னார், அளக்கட்டு பகுதியில் நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார், அளக்கட்டு - பொற்கேணியில், பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மேலும் கூறியதாவது;
"தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நாட்டு அரசியலில் நவீன மாற்றம் ஏற்படப்போகிறது. இந்த மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேச சபை கருதப்படும். அந்தளவுக்கு இப்பிரதேச தாய்மார்கள் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கின்றனர். எனவே, இம்மாதம் 22இல் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்துக்கு அத்திவாரமிட்ட பெருமை, இந்தப் பிரதேசத்து தாய்மார்களுக்கே கிடைக்கும்.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 14-09-2024
ஏழைத் தாய்மார்களின் பசியை உணர்ந்தவர் சஜித் பிரேமதாச. இவரது தந்தைதான் வறுமையை ஒழிப்பதற்கு "ஜனசவிய" திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர். தான் ஆட்சிக்கு வந்தால் ஏழைத் தாய்மார்களுக்கு மாதாந்தம் இருபதாயிரம் ரூபாவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதுபோன்ற நல்ல நிகழ்ச்சித் திட்டங்கள் சஜித் பிரேமதாசவிடம் உள்ளன.
இப்போது சிலர், எங்களிலிருந்து பிரிந்து ரணிலை ஆதரிக்கச் சென்றுவிட்டனர். முன்னாள் உறுப்பினர்கள் என்ற கௌரவம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது. எமது தாய்மார்கள் வழங்கிய வாக்குகளால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சென்றதாலே, இந்த கௌரவங்கள் இவர்களுக்கு கிடைத்தன. பணத்துக்காக விலைபோனதால், முசலி சமூகத்தின் கௌரவத்தை மலினப்படுத்திவிட்டனர்.
ஆகையால், விலைபோவோர்களுடன் நாங்கள் இல்லை என்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும். எனவே டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து, சஜித் பிரேமதாசவின் வெற்றியில் பங்காளர்களாவோம்" என்றார்.