• முகப்பு
  • அரசியல்
  • தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ரணிலுக்கே!  தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கை  - வெற்று கோஷம் என்கிறார் ஆனந்தகுமார் 

தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ரணிலுக்கே!  தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கை  - வெற்று கோஷம் என்கிறார் ஆனந்தகுமார் 

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 12, 2024, 8:38:12 AM

தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமெல்லாம் வெறும் அரசியல் கோஷங்கள் மாத்திரமே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய சூழ்நிலை உருவாகும்.” – என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு வடக்கில் உள்ள ஓரிரு கட்சிகள் முன்னெடுத்துவரும் முயற்சி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஆனந்தகுமார் மேலும் கூறியவை வருமாறு, 

“இலங்கையிலேயே இனவாதமற்ற, மதவாதமற்ற கட்சியென்றால் அது ஐக்கிய தேசியக் கட்சியாகும். அனைத்து இன மக்களும் ஓரணியில் திரளக்கூடிய கட்சியாகவும் அக்கட்சி திகழ்கின்றது.

ஐ.தே.கவின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ‘ஸ்ரீலங்கா பெஸ்ட்’ என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுபவர். அவரிடம் இனவாதம், மதவாதம் கிடையாது, அனைவரும் இலங்கையர்கள், அனைவருக்கும் சம உரிமைகள் உண்டு என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்துவருகின்றார்.

அதனால்தான் சிறுபான்மையின மக்களின் காவலனாகக் கருதப்படும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பேராதரவு வழங்கிவருகின்றனர்.

2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ரணிலின் கோரிக்கையின்பிரகாரம் தமிழ் பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினர். அதன்பின்னர் ரணில் கூறியதால் சஜித்தையும் ஆதரித்தனர். அடுத்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இதனை குழப்புவதற்கு சில தமிழ் அரசியல் வாதிகள் முற்படக்கூடாது. 


ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின்கீழ்தான் தமிழ் பேசும் மக்களின் அபிவிருத்தி அரசியல் மற்றும் உரிமை அரசியல் என்பவற்றை வென்றெடுக்க முடியும். எப்போதும் உண்மையைக்கூறி அரசியல் நடத்தும் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வுகளை வழங்குவார்.

எனவே, ரணிலின் வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பங்காளிகளாக வேண்டும். மாறாக பொதுவேட்பாளர் என்ற கோஷம் ஊடாக மக்களை குழப்பி, சாதகமான சூழலை திசை திருப்ப முற்படக்கூடாது. அவ்வாறு செய்தால் அது தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே அமையக்கூடும்.” – என்றார் சுப்பையா ஆனந்தகுமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended