• முகப்பு
  • அரசியல்
  • பொது வேட்பாளரை நிறுத்தி விட்டு ரணிலிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசிவிட்டு வந்திருக்கின்றனர் இது பச்சை துரோகம்

பொது வேட்பாளரை நிறுத்தி விட்டு ரணிலிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசிவிட்டு வந்திருக்கின்றனர் இது பச்சை துரோகம்

வவுனியா

UPDATED: Aug 13, 2024, 11:15:17 AM

பொது வேட்பாளரை நிறுத்தி விட்டு ரணிலிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசிவிட்டு வந்திருப்பதானது மக்களுக்குச் செய்யும் பச்சை துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொதுவேட்பாளர் என்பது என்னைப்பொறுத்தவரை திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புக்களும், கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஓற்றையாட்சிக்குள் 13ம் திருத்தச் சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயற்பட்டவர்கள். 

குறிப்பாக விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் இந்தியாவின் கைக்கூலிகள். இவர்கள் கடந்த காலங்களில் 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை எழுதியவர்கள். 

13வது திருத்தச் சட்டத்தினை வலியுறுத்திய தரப்புக்கு சேதாரம் ஏற்படாமல் இருப்பதற்கும், மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்படாமல் இருப்பதற்காக அவர்களை பேணி பாதுகாத்து தொடர்ந்தும் மக்களை அவர்களுடன் வைத்திருப்பதற்கான கருத்துருவாக்கங்களை இவ்ஆய்வாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் செய்து வந்திருந்தனர்.

13-வது திருத்தச் சட்டத்திற்கு பின்னால் செல்பவர்களை நிராகரித்து சுய நிர்ணய அடிப்படையிலான சமஸ்டி என்ற நிலைப்பாட்டுடன் பயணிக்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பின்னால் மக்கள் திரண்டு விடாமல், மீண்டும் அம்மக்களை இடைநிலையில் வைத்துக் கண்டு 13-ஆம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்துகின்ற தரப்புகளுக்கு பின்னால் மக்களை திரட்டி கொடுக்கின்ற செயற்பாடுகளை செய்தவர்கள் தான் இவ் ஆய்வாளர்களும் சிவில் அமைப்புகள் என்று சொல்பவர்களின் பணியாக கடந்த காலத்தில் இருந்திருக்கின்றது. 


பொது வேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்திவிட்டு நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனிற்கு விசேட நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனிற்கு யாழ் மாவட்டத்திற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இவருடைய அடிமையாக இருக்கக்கூடியவரும் இந்தியாவின் கைக்கூலியாக இருக்கின்ற சுரேன் குருசாமி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியினை சார்ந்தவர்களும் குறித்த சந்திப்பிற்கு சென்றிருக்கிறார்கள்.

மேலும் இச்சந்திப்பின் போது 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியினை பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றனர்.

இவர்கள் செய்தது பச்சை துரோகமான செயலாகும். இவர்கள் இந்தியாவின் நலனை பேணக்கூடிய நபர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையிலும் தமிழர்கள் இந்த ஆட்சியாளர்களின் மீது அதிருப்தி அடைந்து, இவ் ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலையை புரிந்து கொண்டு இத்தேர்தலைப் புறக்கணித்து இத்தேர்தலில் ஒதுங்கி இருக்கின்ற நிலைமைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவும், தமிழர்கள் இத்தேர்தலை புறக்கணிப்பிலிருந்து தவிர்த்து அவர்களை குழப்பி ஏதோ ஒரு விதத்தில் வாக்களிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும். இப்பகிஸ்கரிப்பை தோற்கடிப்பதற்காகவும் தமிழர்களை மண்டியிட செய்வதற்காகவும், இவர்கள் போட்டிருக்கின்ற ஒரு நாடகம் தான் பொது வேட்பாளர் என்பதாகும்.


இப்போது பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அரியநேந்திரன் என்பவர் 2010 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்து சம்மந்தர், சுமந்திரனோடு இணைந்து குறிப்பாக சுமந்திரன் உடைய அனைத்து துரோகமான செயற்பாடுகளுக்கும் முழுமையாகத் துணை நின்றவர். 

2012ம் ஆண்டு ஜெனிவாவிலே உள்ளக விசாரணை கொண்டு வந்த போது சுமந்திரனுடைய முழு துரோகமான செயற்பாடுகளுக்கும் துணை நின்றவர். மஹிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதிகளிற்கு எதிராக சர்வதேச விசாரணை வராமல் தடுத்து உள்ளக விசாரணை என்ற போர்வையிலே இலங்கையை மீட்டெடுக்கின்ற விடயங்களுக்கு அவர்களிற்கு முழுமையாக துணை நின்றார்கள். 

விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள் என சம்பந்தர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது சம்பந்தருக்கு உறுதுணையாக நின்றவர்கள். இவர்கள்தான் கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலே போட்டியிட்டு 10 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்.

அதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டிலே16 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் அப்போது நாடாளுமன்றத்திலே ரணில், மைத்திரி அரசுடன் இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றினை செய்திருந்தனர். இதில் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை மறுதலித்து, வடகிழக்கு பிரிப்பை உறுதி செய்து ஏக்கிய ராஜ்ய என்பதை ஏற்றுக் கொண்டு சமஷ்டியை கைவிட்டே அவ்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. 

அந்த வரவினை உடனிருந்து தயாரித்த தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்ட 20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழரசு கட்சியின் மத்திய குழு முழு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது. அந்த வகையிலே அறியநேந்திரன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்து அவருடைய தலைமை எடுத்த அத்தனை துரோகங்களுக்கும் ஒத்துழைத்து பங்காற்றி இருக்கின்றார். இவர்கள் 13 திருத்தச் சட்டம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கின்றவர்கள்.

மக்களை ஏமாற்றி பகிஷ்கரிப்பை தோற்கடிப்பதற்காக மட்டும் தான் இந்த பொது வேட்பாளர் என்ற விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொது வேட்பாளரை நிறுத்தி விட்டு நேற்றைய தினம் ரணிலிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி தான் பேசிவிட்டு வந்திருக்கின்றனர். ஆகவே இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.



 

VIDEOS

RELATED NEWS

Recommended