காலையில் அமலாக்கத்துறை செல்லும், மதியம் சிபிஐ செல்லும், மாலையில் வருமானவரித்துறை செல்லும், மறுநாள் பாஜகவின் கணக்கில் 1000, 2000 கோடி வரவு வைக்கப்படும்.
ஜெயராமன் & தருண் சுரேஷ்
UPDATED: Apr 11, 2024, 6:04:35 AM
திருவாரூர் தெற்கு வீதியில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வை செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அருவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்ததாவது :
மனித உரிமைகள், தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்ட பாஜக. அதற்கு துணையாக இருந்த அதிமுக. இந்த இருவரும் தான் தற்போது இரண்டு அணியில் இருக்கின்றனர்.
தனித்தனியாக போட்டியிடுகின்றனர் இவர்கள் இருவரும் எவ்வாறு மக்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர் என்பது நமக்கு தெரியவில்லை.
வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்த மக்களிடமிருந்து 21,000 கோடி ரூபாய் மோசடி செய்தவர் மோடி.
பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன் என்று கூறினார். ஆனால் 100 ரூபாய் தாண்டி விற்பனையாகி வருகிறது. மோடி சொன்ன எந்த வாக்குறுதியும் அவர் நிறைவேற்றவில்லை. ஆனால் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறது.
மோடி மக்களுக்கான பிரதமர் இல்லை. முதலாளிகளுக்கான பிரதமர். தமிழ்நாட்டில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முக ஸ்டாலின் தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளில் 80 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார்.
புதுமைப்பெண், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறார்.
மோடி அவர்களே தமிழ்நாட்டுக்கு வாருங்கள். ஒரு ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த ஆட்சி முதலாளிகளுக்கான ஆட்சி இல்லை. மக்களுக்கான ஆட்சி என்பதை தமிழ்நாட்டுக்கு வந்து நீங்கள் பாடம் படியுங்கள்.
40 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரத்தை கொண்டாடாத அவர்கள். சுதந்திர தின கொடியை தனது அலுவலகத்தில் ஏற்றாதவர்கள், எப்படி எந்த தைரியத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்.? இவர்களுக்கு எப்படி தேசப்பற்று இருக்கும்..?
தேர்தல் பத்திரங்களை பொதுவெளியில் வெளியிடுங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்த போது அதற்கு வாய்தா கேட்டவர்கள் இவர்கள். நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாய்தா கேட்கலாம். ஆனால் அரசாங்கமே வாய்தா கேட்பது இதுதான் முதல் முறை.
காலையில் அமலாக்கத்துறை செல்லும், மதியம் சிபிஐ செல்லும், மாலையில் வருமானவரித்துறை செல்லும், மறுநாள் பாஜகவின் கணக்கில் 1000, 2000 கோடி வரவு வைக்கப்படும்.
இதுவா ஆட்சி முறை..? தனது மகன் தவறு செய்ததற்காக அவரை தேரில் இட்ட மனுநீதி சோழன் வாழ்ந்த மண்ணில் இருந்து கொண்டு கேட்கிறேன் . மோடி அவர்களே வாய் திறங்கள். இது என்னவென்றாவது சொல்லுங்கள். பதில் சொல்லுங்கள்.
நீங்கள் இன்னும் ஓராண்டு இருந்தால் இந்த நாடு தாங்காது. இப்படிப்பட்ட பாசிச ஆட்சியை விரட்ட வேண்டும் என பேசினார்.