பணப்பட்டுவாடா இல்லாமல் நேர்மையான தென்காசி மக்களவை தொகுதி தேர்தல் !
இரா.பாலமுருகன்
UPDATED: Apr 20, 2024, 1:07:21 PM
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது- நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே முதன்மை கூட்டணியாக அதிமுக கூட்டணி மாறி உள்ளது.
குண்டூசி அளவு கூட பிரச்சனை ஏற்படாமல் தேர்தலை நல்லபடியாக நடத்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டவன், மற்ற வேட்பாளர்கள் உடன் ஒப்பிடுதல், தொகுதி பிரச்சினையை அதிகம் அறிந்தவன் என்ற அடிப்படையில் தென்காசி தொகுதி மக்கள் எனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளனர்.
இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி. கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
என்னை எல்லோருமே ஆதரித்தார்கள். எல்லா சமுதாய மக்களும் வாக்களித்தார்கள். தேர்தல் நேரத்தில் என்ன வாக்குறுதி கொடுத்தேனோ அதை நிச்சயமாக நிறைவேற்றி தருவேன்.
தென்காசி மக்களவை தொகுதியில் எந்த கட்சியும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.
பணப்பட்டுவாடா செய்தால்தான் வாக்குகள் வாங்க முடியும் என்ற நிலை தென்காசி தொகுதியில் மாறி உள்ளது. ஆளுங்கட்சியான திமுக கூட பணப்பட்டுவாடா செய்யவில்லை என்ற தகவல் ஒரு நல்ல அறிகுறி. பண பட்டுவாடா இல்லாமல் நேர்மையாக முறையில் இந்த வாக்குப்பதிவு நடந்துள்ளது.
ஒரு வாக்குச்சாவடியில் கூட பிரச்சனை ஏற்படவில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு வேட்பாளரின் தகுதியை பார்த்து மக்கள் வாக்கு அளித்துள்ளனர். இந்த ஆரோக்கியமான நிலை தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி, புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.