கூட்டுறவு கடன், பயிர்கடன் அதிமுக ஆட்சியில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
செ.சீனிவாசன்
UPDATED: Jun 19, 2024, 9:04:53 AM
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்றேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நாகை வருகை தந்தார். அவருக்கு அதிமுகவினர் தாரை தப்பட்டையுன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற கட்சியில் இணையும் நிகழ்வில் 640 பேர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் ;
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையையோடு ஆட்சி அமைக்கும் எனவும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நான் முதல்வராக இருந்தபோது கண்ணின் இமைபோல விவசாயிகளை பாதுகாத்து வந்தோம் என்றும், மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயலின்போது அனைத்து முன்னேற்பாடுகளை செய்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து சாதனை படைத்தோம் என்று கூறினார்.
வறட்சி வருகின்ற போதெல்லாம் நிவாரண தொகைகளை வழங்கிய கட்சி அதிமுக என்றும், டெல்டா விவசாயிகளின் நிலம் பரிபோக விடாமல் பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அதிமுக அரசு அறிவித்தது என கூறினார்.
கூட்டுறவு கடன், பயிர்கடன் அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்யப்பட்டதாக பெருமிதம் தெரிவித்த எடப்பாடி , விவசாயிகளுக்கு பசுமை வீடு, கறவை மாடுகள், தடையில்லா உணவுப்பொருள் என வழங்கி ஏழை மக்களை பாதுகாத்த அரசு அதிமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்.
விவசாய தொழிலாளிகளுக்கு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்தும் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற உதவி செய்தோம் என்று கூறிய அவர்
நாகை மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவ கல்லூரி உருவாக்கியது அதிமுக அரசு என்று கூறினார். முன்னதாக தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், பெஞ்சமின், காமராஜ், கேபி.முனுசாமி, சின்னையா, முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.