பாட்னாவில் நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம்  13 பேர் கைது!

Bala

UPDATED: Jun 10, 2024, 6:30:23 PM

நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரத்தில் பிகார் காவல்துறையினர் 13 பேரை, அதில் தேர்வர்கள் உள்பட, கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே பிகாரில் கேள்வித்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த பீகார் காவல்துறை, சிறப்புக் குழு அமைத்து விசாரித்தது. தற்போது, இந்த விவகாரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பீகார் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் :

“நீட் கேள்வித்தாள் கசிந்த விஷயத்தில் 4 தேர்வர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உள்பட 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். பீகார் பொதுப்பணித்துறையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் இருந்தவரும் கைதாகியுள்ளார்.

இப்பொழுது அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் அவர்களிடம் விசாரணை நடைபெறும்.

கைதானவர்களிடம் இருந்து கோப்புகள் மற்றும் மின் சாதன பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் 35 பேருக்கு தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதை கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தப் புகார்களை நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மறுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended