மே 21ல் மேகதாட்டு அணை ஆணையத் தீர்மானத்தை தீயிட்டு எரித்து போராட்டம் பிஆர்.பாண்டியன்.
ஜெயராமன்
UPDATED: May 18, 2024, 4:04:29 AM
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் பி கமல்ராம் தலைமையில் நடைபெற்றது.
மாநில அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர் வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரியில் 50 ஆண்டு காலம் போராடி பெற்ற தமிழக உரிமை பரிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதிநடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சட்டவிரோதமாக மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் அனுமதி கோரி அனுப்பி வைத்துள்ளது.
தீர்மானத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை என்று ஆணைய தலைவர் கூறி வருகிறார்.தொடர்ந்து 2018 முதல் பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அதனை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு முயற்சிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
இந்நிலையில் சட்டவிரோத மேகதாட்டு அணைக்கான தீர்மானத்தை நிராகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
இதனை நிராகரிக்க வலியுறுத்தி ஆணையத்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதனைப் பெற்றுக் கொண்ட ஆணைய தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆதாரங்களோடு முறையிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் வரும் மே 21ஆம் தேதி ஆணையத்தின் 20வது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நீர் பாசனத் துறை அதிகாரிகள் நேரில் பங்கேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் தீர்மானத்தை நிராகரிக்க வலியுறுத்தி உரிய சட்ட ஆதாரங்களோடு தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும்.
மேகதாட்டு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 21 ஆணைய கூட்டம் நடைபெறவுள்ள அதே நாளில் காவிரி டெல்டா மாவட்டங்களின் தலைநகரங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் நகரங்களில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை மழை வரலாறு காணாத வகையில் பெய்து வருகிறது. கிடைக்கின்ற மழை நீரை சேமித்து வைப்பதற்கு ஏரி குளம் குட்டைகள் தூர்வாராததால் வறண்டு கிடக்கிறது.
குடிமராமத்து திட்டம் செயல்படுத்தி இருந்தால் தற்போது கிடைக்கக்கூடிய மழை நீரை சேமித்து வைத்திருக்க முடியும். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் குடிமராமத்து திட்டத்தை கைவிட்டதால் கிடைத்த மழைநீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். உடனடியாக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கோடை மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்துள்ள பருத்தி,வாழை,எள், நிலக்கடலை, உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் முழுமையாக அழிந்துள்ளது.
பருத்தி ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 50,000 மும் வாழை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும் மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி உரிமைக்கான தொடர் போராட்டத்தையும் தீவிர படுத்த உள்ளோம்.தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகள் விவசாயிகள் அமைப்புகள் கொண்ட கூட்டத்தை கூட்டி காவிரி மேகதாட்டு அணைக்கு எதிரான போராட்டக் களத்தையும்,சட்ட போராட்டத்தையும் தீவிர படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் காவிரி பாசன பாதுகாப்பு சங்க தலைவர் நாகை துரைராஜ் நாய்னா, மாநில துணைத்தலைவர் எஸ் கிருஷ்ணமணி, மாநில துணை செயலாளர்
எம் செந்தில்குமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர்
வி எஸ் வீரப்பன், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர்கள் பண்டேரிநாதன், , உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.