சங்கராபுரம் பேருந்து நிலையத்தின் வெளியே ஆக்கிரமிப்புகளை அகற்றுமா பேரூராட்சி

கோபி பிரசாந்த்

UPDATED: May 6, 2024, 6:05:46 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் தினசரி போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க படுமா என் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சங்கராபுரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. சங்கராபுரத்தைச் சுற்றி 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியவாசிய தேவைக்கு தினசரி சங்கராபுரம் நகருக்கு வருகின்றனர்.

நகரில் கடைவீதி, கல்லை மெயின் ரோடு, பூட்டை ரோடு, திருக்கோவிலுார் ரோடு ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் பலர் தங்கள் கடைகளை சாலை வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். 

நகரின் மையப்பகுதியான பூட்டை ரோட்டில் பஸ் நிலையம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, திரையரங்கம், வணிக நிறுவனங்கள் உள்ளதால் இப்பகுதிகளில் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை கடைகளின் முன்பாக தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

சங்கராபுரம் நகரம் வழியாக வெளி மாவட்டமான திருவண்ணாமலை மற்றும் வெளி மாநிலமான திருப்பதி, பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் கார், லாரி, பைக்குகள் என அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. 

மேலும் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. நகரில் போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து காவலர்களும் கிடையாது. 

கள்ளக்குறிச்சி மாவட்டமாக உதயமாகி 4 ஆண்டுகள் ஆகியும், கள்ளக்குறிச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள நகர பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினம் தினம் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended