- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கோயில் நிலங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் காட்டும் மின்வாரியத்துறையை கண்டித்து சாலை மறியல்.
கோயில் நிலங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் காட்டும் மின்வாரியத்துறையை கண்டித்து சாலை மறியல்.
செந்தில் முருகன்
UPDATED: May 6, 2024, 2:37:56 PM
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறை சொந்தமான கோயில் மற்றும் ஆதீனத்தின் நிலங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதனிடையே மின்வசதி கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கும் நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறி மின் இணைப்பு வழங்க தேவையான ஆவணங்களை தர மறுப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்து மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் உள்ள மூவலூர் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்போர் நல சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் பொதுமக்களை அலைக்கழித்து வரும் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பம் அளிக்குமாறும், உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.