- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பூந்தமல்லி சித்திபுத்தி சமேத ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோவிலில் 9-ஆம் ஆண்டு சூரசம்ஹாரம்.
பூந்தமல்லி சித்திபுத்தி சமேத ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோவிலில் 9-ஆம் ஆண்டு சூரசம்ஹாரம்.
ஆனந்த்
UPDATED: Nov 7, 2024, 6:24:01 PM
சென்னை
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஸ்ரீ சித்திபுத்தி உடனுறை ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி சந்நிதியில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இங்கு எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நடந்து வந்தது.
பின்னர் பல்வேறு காரணங்களால் நின்று போன இந்த விழா கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா
கந்தசஷ்டியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அறுபடை வீடுகளில் எழுந்தருளியுள்ள முருகன் போன்ற சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
மேலும் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக சத்ரு சம்ஹார திரிசதி தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகிஷாசூர சம்ஹாரம் நிகழ்ச்சியில் சிவசக்தி வேல் கொண்டு முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார்.
அப்போது யானை முகம், சிங்க முகம், மகிஷ முகம் என பல்வேறு வடிவம் எடுத்த சூரனை, முருகப்பெருமான் மகா சூரசம்காரம் செய்து ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் நவ.8ஆம் தேதி மாலை சுப்பிரமணியசுவாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூந்தமல்லி முன்னாள் நகர்மன்ற தலைவர் கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம், நிர்மலா ஞானம், டாக்டர் பிரேம்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.