சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்

அஜித் குமார்

UPDATED: Apr 25, 2024, 7:52:43 PM

திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே. அதாவது மே இரண்டாம் தேதி முதல் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே கால அட்டவணையுடன் வெளியிட்டுள்ளது.

அக்னித் தலமாக விளங்குகிற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து சேவை அதாவது பேருந்து சேவைகள் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு ரயில் சேவை இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முறை, வேலூர் அல்லது விழுப்புரத்தில் இருந்து வரும் மெமு, அல்லது இரண்டிலும், செயல்பாட்டு சாத்தியக்கூறுகளைப் பொறுத்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்திடம் தற்போது அனுமதி கிடைத்ததும், புதிய ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இது நாள் வரை சரியான அறிவிப்புகள் எதுவும் ரயில்வே துறையிலிடமிருந்து வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த ரயில் சேவை இனி வரும் நாட்களில் நிரந்தரமாக நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

அதாவது, தினமும் சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும்.

வரும் மே மாதம் 2 ம் தேதியிலிருந்து இந்த ரயில் வேலூர் கண்டோன்மெண்ட்டுடன் நிற்காமல் பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05 க்கு சென்று சேரும்.

அதேபோல, மே மாதம் 3 ம் தேதியிலிருந்து திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.

இந்த ரயில் சேவை அடுத்த மாதம் 3 ம் தேதி முதல் இயக்கப்படும் என்ற அறிவிப்பு அதிகாரவபூர்வமாக தெற்கு ரயில்வே கால அட்டவணையுடன் வெளியிட்டுள்ளதால் பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

VIDEOS

Recommended