மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை மே 14 ஆம் தேதி கனியாமூர் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மூவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.
கோபி பிரசாந்த்
UPDATED: May 1, 2024, 2:51:15 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பள்ளி ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை வழக்கில் இருந்து நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து,
மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி அளித்தப் மனுவின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதல் முறையாக கடந்த 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, செல்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்பாமோகன், வழக்கில் இருந்து நீக்கப்பட்ட இரு ஆசிரியைகளையும் மீண்டும் சேர்க்க வேண்டும். வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது, ஆஜராகிய வழக்கறிஞர் தேவசந்திரன், மனுவிற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்றையத் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி ஸ்ரீராம் அப்போது உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை இரண்டாவது முறையாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு விசாரணையை வரும் மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.
மேலும், அன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணியாமூர் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இன்றைய விசாரணைக்கு மனுதாரர் செல்வி மற்றும் தரப்பு வழக்கறிஞரான பாப்பாமோகனிடம் பணிபுரியும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் வந்திருந்தனர்.