15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த பலே திருடன்.
லட்சுமி காந்த்
UPDATED: Sep 1, 2024, 6:23:33 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
சாலவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஜனவரி மாதம் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு கடையின் உள்ளே நுழைந்து 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள 111 மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பினர்.
இது தொடர்பாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் சாலவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள 150 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து, வேடந்தாங்கல் பகுதியில் பதுங்கி இருந்த சுபாஷ் ,விஷ்வா ,விக்னேஷ் ஆகிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Latest Crime News
இந்த கொள்ளை சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான சதுரங்கபட்டிணம் பகுதியை சேர்ந்த மோகன்குமார் வயது 44 என்பவரை தனிப்படைகள் அமைத்து மிகத் தீவிரமாக தேடப்பட்டு வந்தது. மோகன் குமாரை பிடிக்க காவல்துறையினர் மிகவும் திணறி வந்தனர்.
இந்நிலையில் மோகன் குமார் செங்கல்பட்டு மாவட்டம் கருகப்பட்டு என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மோகன் குமாரை மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு தீவிர விசாரணை செய்தனர்.
டாஸ்மாக்
விசாரணையில், மோகன்குமார் மதுராந்தகம் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தை வைத்துக்கொண்டு 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில், சுவற்றில் துளையிடும் அதிநவீன கருவிகளை கொண்டு கொள்ளையடித்து விட்டு கள்ள சந்தையில் மொத்த விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதும் குடிப்பதும் "பதுங்கி" இருப்பதும் கடமையாகவே செய்து வந்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு சதுரங்கப்பட்டிணம் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற மோகன் குமார் பரோலில் வெளிவந்து தலைமறைவாக இருந்து கொண்டு, டாஸ்மாக் கடைகளில் நவீன முறையில் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளார்.
Latest Kancheepuram District News
பத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் கொள்ளை அடித்துவந்தும், எந்த காவல் நிலையத்திலும் இவர் இதுவரையில் சிக்கவில்லை என்பது கூடுதல் தகவலாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
காவல்துறையினருக்கே தண்ணியை காண்பித்த கொலை வழக்கு , "தலைமறைவு பரோல்" குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.