பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் தந்தை

ராஜா

UPDATED: Sep 14, 2024, 10:48:18 AM

தேனி மாவட்டம்

உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (44). இவரது இரண்டாவது மனைவி பாண்டீஸ்வரி.இந்த தம்பதிக்கு கடந்த 52 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் சங்கர் தனது ஆண் குழந்தையை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களுக்கு ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் சங்கர் குழந்தையை விற்பனை செய்யவில்லை என்றும்,அவரது மனைவி பாண்டீஸ்வரிக்கு மனநிலை சரியில்லாததால் குழந்தையை சங்கரின் அண்ணனிடம் ஒப்படைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சத்யா விசாரணை செய்திதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சத்யா தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கை விசாரித்த போலீசார் குழந்தையை சங்கரிடமிருந்து ரூ. ஒரு லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய போடியைச் சேர்ந்த சிவக்குமார்(42) மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி (36) மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் குழந்தையை வளர்ப்பதற்காக தத்தெடுத்ததாக சிவக்குமார் தெரிவித்தார்.

சிவக்குமார் மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

சிவக்குமார் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் பணத்திற்காக விற்பனை செய்த சங்கரின் குழந்தை மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended