மயிலாடுதுறையில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
செந்தில் முருகன்
UPDATED: Apr 16, 2024, 7:17:16 PM
மயிலாடுதுறை திருவிழந்தூரில் மார்ச் 20-ஆம் தேதி இரவு கலைஞர் நகரைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26) மற்றும் சுப்பிரமணியன் மகன் சரவணன்(30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிலர் அவர்களை வழிமறித்து அரிவாளால் தாக்கியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சரவணன் காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மார்ச் 21-ஆம் தேதி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மில்கி (எ) சந்திரமோகன் (29), சதீஷ் (22), ஸ்ரீராம் (26), சந்திரமௌலி (24), மோகன்தாஸ் (28), பாலாஜி(29) ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டதின் பேரில், அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கொத்தத்தெரு கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக நடைபெற்ற கொலை சம்பவம் என்பதும், இவ்வழக்கில் கைதானவர்கள் கொத்தத்தெரு கண்ணனின் தம்பி மற்றும் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.