பூந்தமல்லியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற 3 மருந்து கடைகளுக்கு சீல்.
ஆனந்த்
UPDATED: Sep 6, 2024, 7:17:15 PM
திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை அடுத்த பூந்தமல்லியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் கர்ப்பமான நிலையில் பூந்தமல்லியில் உள்ள மருந்து கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவர் பூந்தமல்லியில் உள்ள மருந்து கடையில் இருந்து தான் மருத்துவர்களின் அனுமதி சீட்டு இல்லாமல் கருகலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் கொடுக்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மண்டல உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அம்முகுட்டி அறிவுறுத்தலின் பேரில் இன்று பூந்தமல்லி சரக மருந்துகள் ஆய்வாளர் ரூபிணி, பொன்னேரி சரக மருந்துகள் ஆய்வாளர் பவானி, திருவள்ளூர் சரக மருந்துகள் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் பூந்தமல்லியில் மருத்துவர்களின் அனுமதி சீட்டு இன்றி கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை செய்த 3 மருந்து கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 07-09-2024
உரிய மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்தால் அந்த மருந்து கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.