ஆதிதிராவிடர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலப்பு சம்பவத்திற்கு பூவை ஜெகன்மூர்த்தி கடும் கண்டனம்.
சுந்தர்
UPDATED: Apr 26, 2024, 7:57:32 PM
இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள அவர், "புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து பதட்டம் நிறைந்த மாவட்டமாகவே உள்ளது.
பட்டியலின மக்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர்.
ஏற்கனவே குடிநீரில் மலத்தை கலந்தார்கள் அதுமட்டுமின்றி மலத்தை கலந்தது நீங்கள்தான் என ஒத்துக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்களையே காவல்துறையினர் துன்புறுத்தினார்கள்.
தொடர்ந்து அந்த மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக பல தொல்லைகளை கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே மாவட்டத்தில் தற்பொழுது கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் ஆதி திராவிடர் பகுதியின் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மாட்டு சாணத்தை கலந்திருக்கிறார்கள்.
இது கண்டனத்திற்குரியது. அந்த மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடப்பது மன வேதனை அளிக்கிறது.
ஏன் அவர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் யார் இதை செய்தார்கள் என்பதை அதை காவல்துறை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் காரணத்துடன் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் யார் கண்டுபிடித்தார்கள் என்பது தெரிந்தும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டம் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகம் அநீதி இழைக்கும் இடமாக உள்ளது.
முன்பெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்து உதைப்பார்கள் வீட்டை எரிப்பார்கள் ஆனால் இப்போது அவர்கள் உடல் நலத்திற்கு கேடு விளைக்கும் செயலில் ஈடுபடுவது கேவலமாக உள்ளது.
இது திராவிட மாடல் அரசு என்கிறார்கள் பெரியார் மண் என்கின்றார்கள் ஆனால் இந்த பெரியார் மண்ணில் தான் இது போன்ற கேவலமான செயல்கள் நடப்பது மிகவும் வருத்தம் அளிக்கும் ஒன்றாக உள்ளது.
இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தலைமை காவலரும் உரிய விசாரணை செய்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். உடனே அவர்களை கைது செய்ய வேண்டும் மீண்டும்.
இதுபோல் தவறு நடக்காத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தை ஒரு தீண்டாமை மாவட்டம் என அறிவித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
இல்லையென்றால் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.