குடும்ப தகராறு தாயை அடித்துக் கொன்ற சித்தா டாக்டர்

செ.சீனிவாசன்

UPDATED: Apr 28, 2024, 9:25:43 AM

Latest Crime News and Updates

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நடுத்திட்டு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜானகி (வயது 70). மணல்மேடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்ததால் ஜானகி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவரது முதல் மகன் பாரிராஜன் (53) தாய் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பாரிராஜன் பூம்புகார் அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்தார்.

மயிலாடுதுறை  அருகே தாயை அடித்துக் கொன்ற சித்தா டாக்டர்

இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜானகி வீட்டில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

மேலும் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் காணவில்லை. இதுகுறித்து பாரிராஜன் கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து,

ஜானகியை யார் கொலை செய்தது?., நகைக்காக கொலை செய்யப்பட்டாரா ? என்கிற பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வந்தனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இந்த விசாரணையில் திருப்தி இல்லாததால், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று இறந்து போன ஜானகியின் 2-வது மகன் பாரதிதாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை நாகை சிபிசிஐடி பிரிவு போலீசார் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

அதன் பேரில் நாகை சிபிசிஐடி போலீசார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சிபிசிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் சம்பவத்தன்று பாரிராஜன் குடும்பத் தகராறில் தாய் ஜானகியை கட்டையால் தாக்கி கொலை செய்து உள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க ஜானகியின் தங்க சங்கிலியை கழற்றி சென்று, இந்த வழக்கை திசை திருப்ப நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் இந்த சம்பவத்தில் பாரிராஜனே புகார் கொடுத்ததால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். 

இதையடுத்து டாக்டர் பாரிராஜனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயை கொலை செய்த மகனை 4 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended