கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பணத்தைத் திருடும் தில் சாந்தி
சுந்தர்
UPDATED: Aug 6, 2024, 7:38:47 AM
சென்னை தண்டையார்பேட்டை
சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரின் மனைவி உஷா ராணி. இவரும் இவரின் மகளும் துணி எடுக்க கடந்த 4-ம் தேதி தி.நகருக்குச் சென்றனர்.
ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஜவுளி கடையில் உஷா ராணியும் அவரின் மகளும் துணியை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் அருகில் நின்ற பெண் ஒருவர், உஷா ராணியின் மகளின் ஹேண்ட் பைக்கிலிருந்து பணத்தைத் திருடினார்.
Latest Crime News
அதைக் கவனித்த உஷா ராணியும் அவரின் மகளும் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் கடை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அப்போது அந்தப் பெண், நான் திருடவே இல்லை என சத்தியம் செய்தார்.
இதையடுத்து அந்தப் பெண்ணைப் பிடித்து மாம்பலம் காவல் நிலையத்தில் உஷா ராணி ஒப்படைத்தனர். போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவரின் பெயர் சாந்தி என்கிற தில் சாந்தி (53) என்றும் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.
இதையடுத்து தில் சாந்தியிடம் விசாரணை நடத்தி அவர் திருடிய பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு தில் சாந்தியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Latest Chennai District News
பிரபல கொள்ளைக்காரி தில் சாந்தியை பெண் ஒருவர் பிடித்துக் கொடுத்த சம்பவம், தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாம்பலம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட தில் சாந்தி, மீது கடந்த 2012-ம் ஆண்டு முதல் தடவையாக பூக்கடை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர், கூட்டம் அதிகம் உள்ள கடைக்குள் நுழைந்து அங்கு பொருள்கள் வாங்குவதைப் போல நடித்து பணம், நகைகள், செல்போன்களைத் திருடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
News
சம்பவத்தன்று தில் சாந்தி, உஷா ராணியையும் அவரின் மகளையும் நீண்ட நேரமாக கண்காணித்து அவர்களைப் பின்தொடர்ந்து பணத்தை திருடியபோதுதான் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
தில் சாந்தி மீது மாம்பலம், பாண்டி பஜார், தாம்பரம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட 23 காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் தில்லாக பணம், நகைகளைத் திருடுவதால் இவரை அவரின் கூட்டாளிகள் தில் என்று அழைப்பதுண்டு. அதனால்தான் போலீஸ் ரெக்கார்டிலும் தில் சாந்தி என பெயர் பதிவானது. தில் சாந்தியின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.