கும்பகோணத்தில் சாராயத்தை காய்ச்சி தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் போல் போலியாக தயாரித்து விற்பனை.
ரமேஷ்
UPDATED: Aug 24, 2024, 12:59:21 PM
கும்பகோணம் மாவட்டம்
கும்பகோணத்தில் மேலக்காவேரி கேஎம்எஸ் நகரில் போலி மது பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு கே எம் எஸ் நகரில் உள்ள அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு போலி மதுபாட்டுகளை தயாரித்து கொண்டிருந்த சையது இப்ராகிம், அன்புச்செல்வன், கொளஞ்சியம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
போலி மது பாட்டில்கள்
அவர்களிடமிருந்து 250 லிட்டர் சாராயம், 560 போலி மது பாட்டில்கள், தமிழக அரசை போன்று அச்சடிக்கப்பட்ட போலீஸ் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை வாடகைக்கு எடுத்து, பாண்டிச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து அதனை 180 எம்.எம் மது பாட்டில் போன்று போலியாக தயாரித்து, அதில் தமிழக அரசின் ஸ்டிக்கர்களை போலியாக தயாரித்து ஒட்டி விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சிறை
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 மாதங்களாக போலி மதுபானத்தை தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டறியாமல் இருந்தது தொடர்பாக கும்பகோணம் கலால் துறை காவல்துறை மற்றும் சரக காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.