தென்காசியில் குட்கா கடத்தல் மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது.
இரா.பாலமுருகன்
UPDATED: Apr 27, 2024, 12:03:59 PM
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே போலீசார் சோதனையில் சொகுசு காரில் 3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் உட்பட ரெண்டு பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தின் எல்லையான சிவகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள், மது பாட்டில்கள் கடத்தப்பட்டு போலீசாரால் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் சிவகிரி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கிராமப்புறங்கள் வழியாக தென்காசி மாவட்டத்திற்கு காரில் உட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக புளியங்குடி துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்
அப்போது சிவகிரி அருகே உள்ள ராயகிரி வடுகப்பட்டி வழியாக சென்ற ஒரு சொகுசுகாரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த சொகுசு காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அந்த சொகுசு காரையும் காரில் இருந்த இரண்டு நபர்களையும் சிவகிரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீசார் அங்கு காரில் சோதனை நடத்திய போது அந்த காரில் மூட்டை மூட்டையாக ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 450 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி வெங்கடேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 52) மற்றும் அந்த சொகுசு காரை ஓட்டி வந்த டிரைவர் லாசர் (வயது 58) என்பது தெரிய வந்தது.
ALSO READ | நான்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தல்.
மேலும் விசாரணையில் சுபாஷ் சந்திர போஸ் தொடர்ந்து குட்கா புகையிலைப் பொருட்களை வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வந்து தென் மவட்டங்களில் விற்பனை செய்து வந்ததும் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது ஏராளமான குட்கா வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அந்த காரில் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 440 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் லாசர் ஆகிய இருவரையும் போலீசார் சிவகிரி நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினார்கள்.
நீதிபதி ஜெயகாளீஸ்வரி இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.