• முகப்பு
  • குற்றம்
  • காஞ்சிபுரத்தில் பெண் தலைமை காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது.

காஞ்சிபுரத்தில் பெண் தலைமை காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 18, 2024, 8:24:54 PM

காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் டில்லிராணி (33). இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் மேகநாதன் கணினி உதிரிபாகங்கள் விற்பனையாளராக இருந்து வருகிறார். இவர்களுக்கு சுதர்ஷினி (7) என்ற மகளும் சந்திரசேகர் (3) என்ற மகனும் உள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ்வதாக டில்லகூறப்படுகிறது.

இந்நிலையில் டில்லிராணி நேற்று மதியம் பணிமுடித்து விட்டு காஞ்சிபுரம் சாலைத்தெரு பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். 

அப்போது அங்கு வந்த அவரின் கணவர் மேகநாதன், டில்லிராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

வாக்குவாதம் முற்றிய நிலையில் மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டில்லிராணியை இடது கை உள்ளிட்ட பல இடங்களில் குத்தி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

பலத்த காயம் அடைந்த டில்லிராணியை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கணவர் மேகநாதனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

மேகநாதனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்றது தெரியவந்தது. எனவே, தனிப்படை போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை புதுச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் வந்த மேகநாதனை காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து மேகநாதனை சிவகாஞ்சி போலீசார் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் சாலைத்தெரு பகுதியில் நேற்று பட்டப்பகலில் சீருடை அணிந்த பெண் காவலரை கத்தியால் தாக்கிய சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்திய ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

 

VIDEOS

Recommended