அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நில மோசடியில் உடந்தையாக இருந்த நில மோசடியில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது
கோபிநாத்
UPDATED: Jul 17, 2024, 1:58:43 PM
நில மோசடியில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நில மோசடியில் உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கடந்த ஜூன் 14ஆம் தேதி கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசில் புகார்
மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்தார்.
சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் பிரவீன் உட்பட 13 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி எம்.ஆர் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார் அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். விஜயபாஸ்கரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
கேரள மாநிலம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரள மாநிலம் திருச்சசூரில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளா சென்று நேற்று காலை விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் கரூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவரை நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது
இந்நிலையில், ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிரித்விராஜை சிபிசிஐடி போலீசார் கரூரில் கைது செய்துள்ளனர்.
22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பிரித்விராஜ் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.
Non traceable சான்றிதழ்
பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலத்தின் அசல் ஆவணம் தொலைந்ததாக, கரூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது பிரித்திவிராஜ் "Non traceable" சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்.
அதன் மூலம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பத்திரப்பதிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.