மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகேயே பிரபல பெப்சி நிறுவனத்தின் டீலர் என்ற போர்வையில் காட்டன் சூதாட்டம், லாட்டரி, குட்கா, மதுபானம் பதுக்கி விற்பனை.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 10, 2024, 5:25:58 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
புண்ணிய ஸ்தலம் என அனைவராலும் போற்றப்படும் காஞ்சிபுரம் மாநகரில் , பல்வேறு வகையான போதை வஸ்துகளின் நடமாட்டம் அதிகரித்ததால் கோவில் நகரம் என பெயர் எடுத்த புண்ணிய ஸ்தலமான காஞ்சிபுரம் தன்னுடைய புராதான பெயரை இழந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாயார்குளம் கனிகண்டீஸ்வரர் கோவில் தெருவில் குமார் (வயது 44) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவர் பிரபல குளிர்பான கம்பெனியான பெப்சி நிறுவனத்தின் டீலராக உள்ளார். இவருடைய இரண்டு குடோன்களும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் போதை வஸ்துகள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடியாக குமாரை மடக்கி பிடித்தனர்.
குமாரின் வீட்டை சோதனை இட்டபோது, விற்பனை போக மீதம் வைத்திருந்த விமல் ,வி1 சேர்ந்து180 பவுச் பாக்கெட்டுகளும் 120 ஹான்ஸ் புகையிலை பவுச் பாக்கெட்டுகளும், மதுபானம் போன்றவைகளும் கண்டறியப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அவருடைய படுக்கை அறையில் பெட்டுக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் காட்டன் சூதாட்டம் செய்ததற்கான ஆதாரங்களையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து பெப்சி டீலர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக பெப்சி குளிர்பானம் விற்பனை என்ற போர்வையில் அனைத்து போதை வஸ்துக்களும் விற்பனை செய்வதாக தெரிய வந்த போதிலும் விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுகின்றது.