22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் சென்னை அசோக் நகரை சேர்ந்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 6, 2024, 7:30:19 PM
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பதால் அதை பயன்படுத்தும் பல இளைஞர்களின் வாழ்க்கை சூனியமாகி வருகிறது.
காவல் துறையினரின் கையூட்டு காரணமாக தான் இந்த அளவுக்கு கஞ்சா கலாச்சாரம் பரவி பள்ளி மாணவர்களையும் பாதித்துள்ளது. இதனாலயே தமிழகத்தில் அதிக சமூக விரோத செயல்களும் குற்ற செயல்களும் பெருகி வருகின்றது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளடக்கிய மூன்று மாவட்டங்களின் போதை பொருள் நுண்ணறிவு பிரிவின் தலைமை அலுவலமாக காஞ்சிபுரம் செயல்பட்டு வருகிறது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, போதை பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பிரபாகருக்கு வந்த ரகசிய தகவலை எடுத்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி மற்றும் காவலர்கள் , தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 47) என்பவர் 22 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது.
அவரை மடக்கி பிடித்து காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் உள்ள போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து பிடிப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை செய்த போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு சென்னை பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப் போவதாக கூறினார்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 07-06-2024
அந்த நபரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கில், கஞ்சா கடத்தி வந்த குற்றவாளி ஆறுமுகம் என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை 1 கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.