போதை மருந்து மற்றும் ஊசிகள் விற்பனையில் ஈடுபட்ட 8 நபர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விற்பனை செய்த அவலம்
JK
UPDATED: Nov 15, 2024, 9:19:36 AM
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக போதை மருந்துகளை வைத்திருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உத்தரவின் பேரில், தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடிவந்தனர்.
குற்றவாளிகள்
இந்நிலையில் கொள்ளிடம் பகுதியில் குற்றவாளிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் விரைந்து சென்று அங்கு மறைந்திருந்த குற்றவாளிகள் மணிகண்டன் (27), சிஜு (33), பாலசுப்பிரமணியன் (38), பிரவீன்குமார் (42 ), வினோத்குமார் (28), ராமசாமி (42), பார்த்திபராஜ் (31), சுபீர்அஹமத் (37) ஆகியோரை இன்று காலை கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து மெத்தபெட்டமின் 21 கிராம் போதை மருந்து ஏற்ற பயன்படுத்தும் ஊசி10, 16கிராம் தங்க சங்கிலி, செல்போன்கள் 5, மொபைல் டிஸ்ப்ளே ஒன்று, கேமரா, இரண்டு பர்ஸ்கள், 2 ஜியோ மோடம், மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விற்பனை
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் Grindr எனும் சமூக வலைத்தள செயலியில் பழக்கமாகி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக, மேற்படி போதை மருந்துகளை உபயோகித்து வந்துள்ளதாக தெரியவருகிறது.
Grindr App
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் Grindr சமூக வலைத்தள செயலியில் உள்ள நபர்களுக்கு, போதை மருந்துகளை கொரியர் மூலமாக விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவருகிறது. சம்மந்தப்பட்ட, மேற்படி கொரியர் நிறுவனத்திற்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்
தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் போதை ஊசி மற்றும் மாத்திரைகள் எங்கிருந்து பெறப்படுகிறது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இது போன்று சட்டவிரோத செயல்களில் யாரேனும் தங்கள் பகுதிகளில் ஈடுபடும் பட்சத்தில் உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.