நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்: கே ராஜன் பேச்சு!

தீபக்

UPDATED: May 15, 2024, 7:25:39 AM

Tamil Cinema News

ரசிகர்களே நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் என்று ஒரு பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ்.

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது.

திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் கே. ராஜன்,இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

Today Cinema News

விழாவில் கே. ராஜன் கலந்து கொண்டு பேசும்போது :

"கன்னி என்கிற அற்புதமான தலைப்பு இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

கன்னி என்பது பரிசுத்தம் தூய்மை என்ற பொருள்படும்.

கன்னிப்பெண் கன்னி கழியாதவர்கள் என்றெல்லாம் சான்றோர்கள் அழைப்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான தலைப்பு வைத்திருக்கிறார், தம்பி மாயோன் சிவா தொரப்பாடி .அவரிடம் திறமை நிறைந்திருக்கிறது ,பேச்சு குறைந்திருக்கிறது.

Today Cinema News and Updates

அவர் வைத்திருக்கிற கதைக் கரு தமிழ்ப் பாரம்பரியம், தமிழ்க் கலாச்சாரம் தமிழ்ப் பண்பாடு ,சித்த வைத்தியம் அனைத்தையும் உள்ளடக்கியது. அப்படிப்பட்ட அற்புதமான கருவைவைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஒரு காலத்தில் சித்த மருத்துவம் சிறந்து விளங்கியது. பிறகு யாரும் ஏறெடுத்து பார்க்காமல் அலோபதிக்குச் சென்றார்கள்.தலைவலி என்றால் காலுக்கு எக்ஸ்ரே எடுப்பான்.ஏனென்றால் அவனது எக்ஸ்ரே மிஷின் சும்மா இருக்கக் கூடாது.பல டாக்டர்கள் படித்துவிட்டு கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள்.

சித்த மருத்துவத்தின் சிறப்பு கொரோனா காலத்தில்தான் தெரிந்தது.அப்போதுதான் படித்தவன், படிக்காதவன் அத்தனை பேரும் அலோபதியை விட்டு விட்டுச் சித்த மருத்துவத்திற்குப் போனார்கள்.சித்த மருத்துவம் தான் பக்கவிளைவுகள் இல்லாதது .

Cinema News

ஒரு மரத்தின் இலை, பூ, காய் ,கனி அனைத்தும் மருந்தாகும். அது சத்து தானே தவிர பக்க விளைவுகள் இல்லாதது.இப்பொழுதுதான் சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் சித்த மருத்துவம் இன்னும் சிறந்து விளங்கும்.அந்த விஷயத்தை இந்தப் படத்தில் அற்புதமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சிவா.

சிறு முதலீட்டுப் படங்களை நான் பாக்யராஜ், பேரரசு அனைவரும் சென்று வாழ்த்துவோம் .நான் சாதாரணமாக நினைத்து தான் இங்கே வந்தேன். இந்த மேடை அற்புதமான மேடையாக இருக்கிறது. அனைவரும் படத்திற்காக ஆத்மார்த்தமாகப் பேசினார்கள். அர்பணிப்போடு உழைத்து இருக்கிறார்கள்.

தயாரிப்பாளரைப் பணம் கொடுக்கும் கருவூலம் போல நினைக்கிறார்கள். இயக்குநர் இல்லாமல் படம் இல்லை. அதே போல் தயாரிப்பாளர் இல்லாமல் படம் இல்லை.தயாரிப்பாளர் காசு போட்டு தேங்காய், பூ, பழம் வாங்கிப் பூஜை போட்டால் தான் எல்லாருக்கும் வேலை. அதே போல படத்தை முடித்து பூசணிக்காய் உடைக்க வேண்டும்.

அதேபோல இது போன்ற விழாக்கள் நடத்த வேண்டும்.ஒரு இசையமைப்பாளர் ஒரு அறைக்குள் இருந்து மெட்டு போட்டுவிட்டால் அது உலகத்தில் பரவி விடாது.ஒரு தயாரிப்பாளர் அவருக்கான தண்ணீர் முதல் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து ட்யூன் வாங்கி கவிஞரை அழைத்து அதற்கான பாடல் வரிகளை எழுத வைத்து, நல்ல பாடகரை வைத்துப் பாடல் உருவாக்கி இது மாதிரி இசை வெளியீட்டு விழா வைத்து,

அதற்குச் சில லட்சம் செலவு செய்து உலகுக்கு அறிமுகப்படுத்தினால் அனைத்துக்கும் தயாரிப்பாளர் செலவு தான்.அவர் செய்கிற வேலைக்குப் பணம் கொடுத்து விடுகிறார்.ஆகவே இந்தப் பாட்டு முழுவதும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம்.எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்து விடுகிறோம்.

அனைத்தையும் வாங்கிக் கொண்டு எனக்கு சொந்தம் சொந்தம் என்று சொன்னால் அது பேராசை.ஆனால் ஒப்பந்தத்தில் அப்படிக் கொடுப்பதாக எழுதியிருந்தால் கொடுத்து விட வேண்டும்.

முதல் போடும் முதலாளிக்குத் துரோகம் செய்துவிட்டு ,தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டதால் இன்று எத்தனையோ படத்தயாரிப்பாளர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

எனவே அனைவரும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குத் துணை நின்று படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இது தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் பற்றிப் பேசி இருப்பதால் தமிழ்நாட்டில் சமீப காலமாக நடக்கும் அவலத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டி இருக்கிறது.தமிழ்ப் பண்பாடு என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான்.

அதேபோல தமிழ்த் திரை உலகில் பல பேர் காதலித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதற்கு உதாரணம் எங்கள் பாக்யராஜ், இன்பமான வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு ரசிகர்கள் நடிகர்களைப் பின்பற்றுகிறார்கள் .நடிகர் கிழிந்த பேண்ட் போட்டால் இவர்கள் கிழித்துக் கொள்கிறார்கள். தலை கலைந்திருந்தால் இவர்கள் தலையை கலைத்து விட்டுக் கொள்கிறார்கள்.

ரசிகர்களே இப்படி நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்.

போன மாதம் தனுஷும் ஐஸ்வர்யாவும் நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள் தமிழ் மக்களிடம் அது பெரிய பரபரப்பு உண்டாக்கியது. இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இப்படிப் பிரிந்து போகிறோம் என்றால் அந்தக் குழந்தையின் கதி என்ன?அந்தப் பெண்ணைப் பெற்ற, உலகம் அறிந்த மாபெரும் தலைவன் அவரது மனது எப்படி வேதனைப்படும்?

இப்போது பார்த்தால் ஜிவி பிரகாஷ் -சைந்தவி பிரச்சினை.சைந்தவி நல்ல பெண் எனது 'உணர்ச்சிகள்' படத்திற்கு முதல் பாடலைப் பாடினார்.நல்ல ஒழுக்கமான அருமையான பெண்.காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

காதலிக்கும் போது மனதை முழுமையாக புரிந்து கொண்டுதான் காதலிக்கிறார்கள்.கல்யாணத்திற்குப் பிறகு ஏன் கசப்பாகப் போகிறது?இருக்கலாம், விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

இப்போது சாப்ட்வேர் கம்பெனிகளில் 15 நாளில் காதல் ,ஒரு மாதம் வாழ்க்கை, மூன்றாவது மாதம் விவாகரத்துக்கு நீதிமன்றம் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் பண்பாடு சித்த மருத்துவம் பற்றிச் சொல்லியிருக்கும் இந்த 'கன்னி' படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' இவ்வாறு கே .ராஜன் பேசினார் .

இப்படத்தை விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் நடிகர் கூல் சுரேஷ் கன்னிப்பெண் வேடத்தில் விழாவுக்கு வந்து பரபரப்பூட்டினார். அவரைப் பார்த்து இயக்குநர் பேரரசு,

"நல்லவேளை 'கன்னி' என்று படத்தின் பெயர் இருந்ததால் ஒரு கன்னி வேடத்தில் வந்திருக்கிறார் . நிர்வாணம் என்று படத்தின் பெயர் இருந்திருந்தால் நினைத்தாலே பயமாக இருக்கிறது'' என்று கூறி கூல் சுரேஷைக் கலாய்த்தார்.

இவ்விழாவில் 96 படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், கன்னி படத்தின் தயாரிப்பாளர் எம். செல்வராஜ், இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி,படத்தில் நடித்த அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் ,ஒளிப்பதிவாளர் ராஜ்குமார்,

இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்,படத்தொகுப்பாளர் சாம், கலை இயக்குநர் சக்திவேல் மோகன்,கலரிஸ்ட் சி. சுருளி ராஜன்,மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்,தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார் ஆகியோர் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended