வணிகர்களை பாதுகாப்பதற்கு சிறப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் விக்ரம ராஜா.
ஜெயராமன்
UPDATED: Jun 26, 2024, 5:53:28 AM
திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
வணிகவரித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். இந்நிலையில் இரும்புக்கு 5 சதவீதம் வரியை குறைத்துள்ளார்கள். அதனை வரவேற்கின்றோம்.
இதே போல் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஐந்து அடுக்கு வரி என்ற முறையை மாற்றி ஒரு முனை வரிவிதிப்பு என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதனை மத்திய அரசு அவசியம் நிறைவேற்றி தர வேண்டும். வணிகர்களை பாதுகாப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும். மின்சார கட்டணம் என்பது வணிக நிறுவனங்களுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே தமிழக அரசு மாதம் மாதம் கணக்கெடுப்பு செய்து மின் கட்டணத்தை வசூலித்திட வேண்டும்.
வங்கியில் போடுகின்ற பணத்திற்கு கணக்கில்லாமல் பணத்தைப் பிடித்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதன் விபரங்களை வெளிப்படை தன்மையுடன் வெளியிட வேண்டும். டோல்கேட் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். காலாவதியான டோல்கேட்களை மூட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேட்டி விக்கிரமராஜா. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்.