காணாமல் ஆக்கப்பட்டோருக்காக சர்வதேச நீதியை கோரி லண்டனில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
சர்வதேச ஊடகம்
UPDATED: Sep 18, 2024, 9:06:58 AM
இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது பலத் தமிழர்கள் காணாமலாக்கப்பட்டனர். இவர்களுக்கு நீதி கோரி இலங்கையில் வாழும் அவர்களது உறவுகளும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை கோரியும் சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இவ்வாறு தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று லண்டன் trafalgar square இல் நடைபெற்றது.
பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் பெருந்திரளாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு இலங்கையில் இடம்பெற்ற போரில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியதுடன், யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியை வழங்க தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய அரசாங்கத்திடமும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் கனடா, அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தனர்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 16-09-2024
இதேவேளை, இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.