கைவிடப்பட்டுள்ள மலையக தோட்டக் கட்டிடங்கள் - இது உங்களின் கவனத்திற்கு
பஸ்ளான் முகம்மத்
UPDATED: Jul 31, 2024, 12:01:23 PM
மலையக தோட்டங்களில் உள்ள பல தோட்டங்களில் தேயிலை தொழிற்சாலைகள் உட்பட பெறுமதியான கட்டிடங்கள் பல பாவனையின்றி கைவிடப்பட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ALSO READ | தீரன் சின்னமலை வரலாறு
வெள்ளை ஏகாதிபத்திய காலத்தில் இலங்கையில் தேயிலை கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே தேயிலை தொழிற்சாலைகள் உட்பட பல கட்டிடங்கள் மிகவும் பழமையானவை எனவும், பல கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் தோட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த கட்டிடங்கள் எந்தவித பாவனைகள் இன்றி கைவிடப்பட்டதால் அழிந்து வருவதைகாணக் கூடியதாக உள்ளது .
மலையக தோட்டங்களில் உள்ள தோட்டங்களைச் சுற்றி தேயிலை தொழிற்சாலைகள், தோட்ட வைத்தியசாலை கட்டிடங்கள், தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள், உரம் மற்றும் உணவு சேமிப்பிற்கு பயன்படுத்தப்படும் கட்டிடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்கள் கைவிட பட்டுள்ளதாகவும், அவை தற்போது அழிந்து வருவதாகவும் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகத் தோட்டங்களை வரி அடிப்படையில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கியதன் பின்னர் பல தோட்டங்களில் அமைந்துள்ள பல பழைய பெறுமதிமிக்க தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து அகற்றப்பட்டு அதிலுள்ள பெறுமதியான இயந்திரங்கள் கூட அழிக்கப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இக் கட்டடங்களை புனரமைத்து உபயோகமான தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு பொறுப்பான திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தோட்டத்திலுள்ள இவ்வாறான பழைய கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து அழிவடையும் என மலையக தோட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.