பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து ஐயாயிரத்து எழுநூற்றி எழபத்தி இரண்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி
ராமு தனராஜா
UPDATED: Sep 5, 2024, 2:34:01 PM
பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து ஐயாயிரத்து எழுநூற்றி எழபத்தி இரண்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா .காந்தீபன் தெரிவித்தார்.
நேற்று பதுளை தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு 523 தேர்தல் மாவட்டங்களில் 530 வாக்கெடுப்பு நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அந்தடிப்படையில் பிரதான வாக்கு எண்ணும் நிலையமான பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் 55 வாக்கு எண்ணும் நிலையங்களும், விஷாக்கா கனிஷ்ட வித்தியாலயத்தில் 29 தபால் மூலம் வாக்கு எண்ணும் நிலையங்களும் மொத்தமாக 84 வாக்கு எண்ணும் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்குகளாக 44083 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றது. அவற்றில் 2022 நிராகரிக்கப்பட்டன. ஏனைய 42061 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கான வாக்களிப்பு 4,5,6 ஆம் திகதிகளில் குறிப்பிட்ட அலுவல்கள் களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் 11,12ஆம் திகதிகளில் மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட விசேட வாக்களிப்பு நிலையங்களில் கலந்துகொள்ள முடியும்.
பிரதானமான முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவு பதுளை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ளது. அதைத்தவிர பிரதேச முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவு மகியங்கனை பிரதேச செயலகத்திலும், பண்டாரவளை வலயக்கல்வி அலுவலகத்திலும் இயங்குகின்றது.
வாக்களிப்பிற்கு வருபவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதி பத்திரம் அவற்றோடு ஓய்வு ஊதியர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை, முதியவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை, மதகுருமார்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை என்பவற்றைப் பயன்படுத்த முடியும்.
அவற்றோடு தமது அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக ஆட்பதிவு திணைக்களங்களில் வழங்கப்பட்ட ஆவணங்களையும் பயன்படுத்த முடியும். இவ்வாறான ஆவணங்கள் இல்லாதவர்கள் தேர்தல் அலுவலகத்தினால் விண்ணப்பிக்கப்படுகின்ற விசேட தற்காலிக அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்க முடியும்.
அவற்றிற்கான விண்ணப்பங்களை தங்களது பிரதேச கிராம சேவகர்களிடம் பெற்று 2 புகைப்படங்களோடு மீண்டும் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும். அவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகள் பிரதேச செயலகத்தினூடாக விநியோகிக்கப்படும். இவை வாக்களிப்பதற்காக மட்டும் பயன்படுத்த முடியும்.
கடந்த காலத்தைப் போல பெருந்தோட்ட மக்களுக்கு காலை வேலை இருப்பதாகவும் 12 மணிக்குப் பிறகு விடுமுறை வழங்க முடியும் என பெருந்தோட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.என அவர் தெரிவித்தார்.