• முகப்பு
  • விளையாட்டு
  • கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் - எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் 

கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் - எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் 

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

UPDATED: Oct 20, 2024, 2:50:52 PM

எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புவெளியூர் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கும் உள்ளூர் தலைவர்கள் தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்.

கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் - எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள்.

பிரதேச விளையாட்டை முன்னேற்றுவதுடன் இளைஞர்களை போதையிலிருந்து பாதுக்காக்க வேண்டுமென்பதே எமது நோக்கம்.

பிரதேச விளையாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களை போதையிலிருந்து பாதுக்காக்க வேண்டுமென்பதற்காகவும் அதிகாரத்தில் இருந்த போதும் அதிகாரத்தை இழந்த போதும் நிதியுதவியளித்து வந்துள்ளோம்.

கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும். எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமென ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை இம்ரான்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரதேச இளைஞர்களை வலுவூட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான வேலைத்திட்டங்களைச் செய்துள்ளோம். 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் கழகங்கள், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைந்து அப்பணியினை முன்னெடுக்க வேண்டும். 

கடந்த காலத்தில் இப்பிரதேசத்தின் பிரதிநிதித்துவம் எவ்வாறு விலைப்பட்டுப்போனது என்பது உங்களுக்கு தெரியும். இனியும் அப்படி விலைப்பட்டு போகின்ற சமூகமாக இருந்து விடாமல், எல்லோரும் ஒற்றுமைப்பட்டு பிரதிநிதித்துவத்தைப்பெறும் வல்லமையுடன் அதனை வெளிப்பிரதேச அரசியல்வாதிகளுக்கு முகவர்களாக இல்லாமல் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் காப்பற்றிக்கொள்கின்ற அமைப்புக்குள் நாங்கள் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். 

கடந்த காலத்தில் கல்குடாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தோற்கடித்து வெளியூர் பிரதிநிதியை வெல்ல வைத்தும் இம்மைதானத்திற்கு ஒரு லோட் கிறவலைக்கூட போட முடியவில்லை என்பது தான் வாஸ்தவம். இது உங்கள் கண்ணுக்கு முன்னாள் தெரிகின்ற சாட்சியம்.

இந்த கட்டுமானத்தைக்கூட பாவிக்கக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்கே கடந்த காலங்களில் சரிவர நெறிப்படுத்தி, திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு வரவிருக்கின்ற தேர்தலின் பின்னர் இப்பிரதேசத்திலிருக்கின்ற இளைஞர்களுக்கு வழி விடுகின்ற வேலைத்திட்டத்தையும் அவர்களையும் உள்வாங்கி ஒவ்வொரு தேர்தல்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற சந்தர்ப்பத்தையும் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க காத்திருக்கின்றோம்.

ஆனால், எக்காரணத்துக்காகவும் வெளியூர் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குகின்ற வேலையை செய்கின்ற இப்பிரதேசத்திலுள்ள தலைவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.


இவ்விடயத்திலே நீங்கள் விழிப்பற்றவர்களாக இருப்பீர்களாக இருந்தால் என்றோ ஒரு நாள் உங்கள் பிள்ளைகள் அல்லது இம்மைதானத்திலே இருக்கும் உங்களில் ஒருவர் பாராளுமன்றத்தையோ மாகாண சபையையோ அலங்கரிக்கவே முடியாது போய் விடும் என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்தியாக வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டும். 

அத்துடன், இச்சுற்றுத்தொடரில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வாழைச்சேனை அல் அக்‌ஷா அணியினருக்கும் இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்ட ஜெயந்தியாய லெஜண்ட் அணியினருக்கும் பங்கு பற்றிய ஏனைய அணிகளுக்கும் சுற்றுத்தொடரை சிறப்பாக வெற்றிகரமாக நடாத்தி முடித்த இம்ரான்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் மற்றும் கழக நிருவாகிகள், விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதுடன், என்னையும் அதிதியாக அழைத்து கெளரவித்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended