இஸ்லாமிய ஐக்கியப் பேரவையுடன் கைகோர்க்குமாறு முன்னாள் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் அழைப்பு
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 14, 2024, 8:03:17 AM
இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் நேர்மறையான பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதனூடாக, வித்தியாசமான குழுக்களுக்கிடையே புரிதலையும் மதிப்பையும் மேம்படுத்துவதில் ஏனையவர்களும் கைகோர்க்குமாறும் அதன் மூலம் ஊக்குவிக்க முடியும் என முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பணிபுரிந்து, உயர்பதவி ஏற்பதற்காக திணைக்களத்தில் இருந்து இன்றுடன் (14) பிரிந்து செல்கின்ற பைஸல் ஆப்தீனுக்கு இஸ்லாமிய ஐக்கியப் பேரவை நிகழ்த்திய பிரியாவிடை நிகழ்வின் போது வழங்கிய நற்சான்றுப் பத்திரத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் கோட்பாட்டுக்கும் செயற்பாட்டுக்கும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் ஸெய்யித் ஸாலிம் மௌலானா சார்பாக அவரது சகோதரர் ஸெய்யித் திஹாம் மௌலானா, ஏனைய ஸ்தாபகர்களான ஸெய்யித் ஹஸன் மௌலானா அல்காதிரி, அஷ்ஷெய்க் அப்துல் முஜீப், நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத், திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன், உதவிப் பணிப்பாளர்களான அலா முஹம்மத், எம். நிலௌபர், இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கான திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க் முப்தி முர்ஸி உட்பட திணைக்களத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பணிப்பாளரின் நற்சான்றுப் பத்திரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
வெவ்வேறான 30 முஸ்லிம் குழுக்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஒற்றுமைப் பேரவை, இலங்கையில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் வலுவான உறவுகளை வளர்க்கும் உன்னத பணியை மேற்கொண்டுள்ளது.
ரமழானை அமைதியாக அனுசரிப்பதை உறுதி செய்வதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் சகிப்புத்தன்மையினதும் ஒத்துழைப்பினதும் பெறுமானங்களை நிலைநிறுத்துவதற்குமான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
ALSO READ | ஹிட்லிஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.
அவர்களின் அடைவுகளை அங்கீகரிப்பதென்பது அவர்களின் கடின உழைப்பை பறைசாற்றுவது மட்டுமின்றி அவர்களின் தாக்கமான முயற்சிகள் தொடர்வதற்கான ஊக்குவிப்புமாகும்.
அவர்களின் நேர்மறையான பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதனூடாக, வித்தியாசமான குழுக்களுக்கிடையே புரிதலையும் மதிப்பையும் மேம்படுத்துவதில் ஏனையவர்களும் கைகோர்க்குமாறு எமக்கு ஊக்குவிக்க முடியும்.
இஸ்லாமிய ஒற்றுமைப் பேரவையின் முயற்சிகளை அல்லாஹ்தஆலா ஆசீர்வதித்து, முஸ்லிம் சமூகத்திலும் அதற்கு அப்பாலும் உறவுப் பாலம் அமைப்பதும் ஒற்றுமையை வளர்ப்பதுமான அவர்களின் உன்னத பணிக்கு வெற்றியையும் வழங்குவானாக.