வேர்களை தேடி இலங்கை -சிரந்தீப் பயணம்! பயணம் தொடர்பில் அனுபவ கட்டுரை

KAM முஹம்மது அபூபக்கர் Ex MLA

UPDATED: Jul 7, 2024, 5:15:05 PM

30.06.2024 அன்று காலை சிரந்தீப் எனும் இலங்கை தலைநகர் கொழும்பு வில் சிறப்புடன் நடைபெற்ற Srilanka Muslim Media Forum வருடாந்த மாநாட்டில் பங்கேற்றோம். நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர ஒருங்கினைப்பாளர் மார்க் ஆண்டே பிராண்சு, இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதர் டாக்டர். அலிரஜா டெல்கோஸ் ஆகியோருடன் பங்கேற்று உரையாற்றும் அறிய வாய்ப்பை பெற்றேன்.

original/img-20240707-wa0152
 நாடாளுமன்ற இன்னாள் , மேனாள் உறுப்பினர்கள், இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் ஊடகவியாளர்கள் பங்கேற்றனர். இவ்வமைப்பை அதன் தலைவர் என். எம்.அமீன், செயலாளர் சாதிக் சிஹான் உள்ளிட்ட நிர்வாகிகள் பணிகளாற்றி வருகின்றனர்.

(ஆளுமைகளுடன்  கலந்துரையாடல்)

Srilanka Muslim Congress தலைவர், மேனாள் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் எம்.பி., கிழக்கு மாகாண மேனாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ், செந்தமிழில் தன் கணீர் குரலால் முழங்கும் PH அப்துல் ஹமீது, செய்யிது நகீப் மெளலானா ஆகியோர்களுடன் ஆன்மீகம், அரசியல், சமூகம் சந்தித்து வரும் பிரச்சனைகளும் அதற்காக வழிகாட்டு தீர்வுகளும் குறித்து கலந்துரையாடிய அறிய வாய்ப்பு. நண்பர் முஹம்மது ஜஸ்மீனின் புதிய நிறுவனத்தை திறந்தோம்.

original/img-20240707-wa0175
நவீன தொழில் நுட்பத்துடன் சீனா அரசின் ஒத்துழைப்புடன் உருவாகி வரும் Colombo Port City, Lotus Tower ஆகிய இடங்கைளை பார்வையிட்டோம்.

தொடர்ந்து இறை இல்லங்கள் The Grand Masjid, சம்மான்கோடு பள்ளிவாசல்களில் வக்த் தொழுகைகளை நிறைவேற்றினோம்.

மஹான் செய்கு உதுமான் (ரலி), மஹான் செய்கு அப்துல் காதிர் சூபி ஹஜ்ரத் (ரஹ்) உள்ளிட்டோர் நினைவிடங்களில் ஜியாரத்.நல்லடியார் தவமிருந்த தப்தர் ஜிலானீ காயல்பட்டினத்தை சேர்ந்த நல்லடியார்கள் முஹம்மது அப்துல் காதர் சாகிப், நூஹ் ஹாஜியார் போன்றவர்களால் எஹலியா கோடாவில் உருவாக்கப்பட்ட பஜார் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு சென்றோம்.

original/img-20240707-wa0147
காயல் செந்தங்களான எம்.ஏ.சி. நூஹ் காக்கா, ரபீக் புகாரி காக்கா, நண்பர் மீரா சாகிப் ஆகியோரை சந்தித்து உரையாடினோம்.உலகில் முதல் மனிதர் பாவா ஆதம் (அலை) நபி அவர்கள் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு இறக்கப்பட்ட இடம் சிரந்தீப் எனும் இலங்கை, முன்பு இந்தியாவுடன் இருந்த பகுதியாகும்.

அவ்விடம் ஆதம் பாவா மலை - சீவனடி பாதம் - ஸ்ரீ பாத - ADAM MOUNT என சர்வ மதத்தவராலும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இச்சுற்றுப் பிரயாணத்திலும் நிறைவேறவில்லை (காரணம் -டிசம்பர் மாத காலத்தில் மட்டுமே அனுமதி). அதேபோன்று 'தப்தர் ஜிலானீ ' பார்க்க வேண்டும் என்ற ஆசை நேற்று நிறைவேறியது, அல்ஹம்துலில்லாஹ்.

இவ்விடம் பாலான்கோடெ பகுதியில் மலை உச்சியில் இருக்கின்றது. சிறப்பிற்குறிய இந்த இடத்தில் இறைத்தூதர் ஹிழ்ரு (அலை), மெய் நிலை கண்ட ஞானி முஹிய்யத்தீன் அப்துல்காதர் ஜிலானீ (ரலி), மஹான் சாகுல் ஹமீது பாதுஷா (ரலி), மஹான் தர்வேஸ் முஹிய்யத்தீன் (ரலி) போன்ற இறை நேசர்கள் தனிமையில் இறைவனை வணங்கி வழிப்பட்டு உயர்நிலை அடைந்துள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தின் அறநெறியை உலகெங்கும் பரப்பியவர்கள். அங்குள்ள பள்ளியில் தொழுதோம், ஜியாரத் செய்தோம், இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தோம், இறைவனை புகழ் தோம், இறை நேசர்களின் தூய பணிகளை நினைத்து வியந்தோம்.

original/img-20240707-wa0153

( இதயத்தை உருக்கிய காத்தான்குடி)

இலங்கை பயணத்தில் ஜூலை 2ம் தேதி இரவு கிழக்கு மாகாணம் சாய்ந்தமருத நகருக்கு சென்றடைந்தோம், கடலோரம் அமைந்த அழகிய கிராமம்,மீன் பிடித்தல் பிரதான தொழில், 100% இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. இதன் ஒட்டிய பகுதி கல்முனை, இங்கு கடற்கறை பள்ளிவாசலில் மஹான் நாகூர் சாகுல் ஹமீது (ரலி) அவர்கள் அறப்பணிகளாற்றிய நினைவிடம் உள்ளது. இங்கிருந்து ஜூலை 3ம் தேதி காலை காத்தான்குடி நகரை அடைந்த போது நாம் எங்கு இருக்கின்றோம் என தோன்றும் அளவிற்கு ஆச்சரியம்! அரபு நாடுகளில் நுழைந்தது போன்ற உணர்வு.ஊரின் எல்லையில் ஈச்ச மரங்கள், இறைவனை போற்றும் வாக்கியங்களுடன் நினைவு தூண்கள், பர்தா அணிந்த பெண்கள், அரேபிய கட்டிட கலையுடன் இறை இல்லங்கள்.


(இறை நேசர்கள் சுஹதாக்கள்)

பிற்பகல் - லுஹர் தொழுகையை மீரா கிராண்ட் ஜும்ஆ பள்ளிவாசலில் நிறைவேற்றினோம்.இப்பள்ளி வாசலில் தான் 03-08-1990 அன்றிரவு இறையடியார்கள் தலை நெற்றியை தரையில் வைத்து சுஜூது செய்து வல்ல இறைவனை வணங்கி கொண்டிருக்கும் போது தான் LTTEயை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் 6 வயது குழந்தை உட்பட 78 இஸ்லாமியர்களை கொலை செய்தனர்,இதே போல் அருகில் உள்ள மஸ்ஜித் ஹுசைனிய்யாவிலும் 25 பேர் என 103 நல்லடியார்களை துப்பாக்கியால் கொன்றனர்.

original/img-20240707-wa0160
குண்டு துழைத்த அடையாளங்கள் இன்றும் பள்ளிவாசல் சுவர்களில் உள்ளது. தப்பித்தவர்களில் ஒருவர் எங்களிடம் அந்நிகழ்வினை கூறிய போது இதயம் - கல்பை உருக்கியது.

நினைக்கும் போதே மனம் பதற்றம் அடைகின்றது. மரணமடைந்த இறையடியார்கள், சுஹதாக்களுக்காகவும், அவர் தம் குடும்பத்தினருக்காகவும் மனம் உருகி பிரார்த்தித்தோம்.அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்) அவர்களின் உர்தூ கவிதை வரிகள் "Islam Zindha Khothahae Har KARBALAKI Bath - ஒவ்வொரு கர்பலா நிகழ்விற்கு பிறகும் இஸ்லாம் உயிர் பெருகின்றது" என்ற பொன் மொழியை அங்கு இருந்தவர்களிடம் ஆறுதலாக கூறினோம், ஈமானில் உறுதி பெற இறைவனிடம் பிரார்த்தித்தோம்.

இதே போன்று ஒரு கொடுமையை 12-08-1990 அன்றும் அருகிலிருக்கும் ஏறாவூரிலும் LTTE யினர் நிகழ்த்தி 58 முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

(பாரம்பரிய அருங்காட்சியகம்)

தொடர்ந்து காத்தான்குடியில் ஆளுமை மிக்க மேனாள் ஆளுநர் ஹிஜ்புல்லாஹ் அவர்களால் பல்வேறு சிரமங்கள், பெரும் செலவில் உருவாக்கப்பட்டுள்ள Srilanka Muslim Heritage Museum (இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய அருங்காட்சியகம்) மற்றும் புண்ணியம் நிறைந்த பைத்துல் முகத்தஸ் அமைப்பில் அரேபிய கட்டிட கலையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புயர் இறை இல்லத்தை பார்த்தோம்.

original/img-20240707-wa0162
இதன் சிறப்புக்களை ஒன்றன் பின் ஒன்றாக ஜனாப். ஹிஜ்புல்லாஹ் அவர்களே எங்களை அழைத்துச் சென்று விளக்கியது அவரது ஆழ்ந்த இஸ்லாமிய ஞானத்தையும்,தொலை நோக்கு சிந்தனையும்,அவரது முழு ஈடுபாட்டையும் உணர முடிந்தது.

 இஸ்லாமியர்கள் இந்நாட்டிற்கு அன்னியர்கள் அல்ல, பூர்வீக குடிமக்கள்! நாட்டின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் இஸ்லாமியர்களின் பங்களிப்பை பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆவணங்களை திரட்டிய வரலாற்று ஆதாரங்களுடன் தத்ரூபமாக அருங்காட்சியகத்தில் காட்சி படுத்தியுள்ளார்.

இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் சரியே! இதே போன்று காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம் - தின் சார்பில் அமைக்க திட்டமிட்டு வரும் " காயல் வரலாற்று ஆவண காப்பகம்" உருவாக்கிட ஆலோசனை வழங்கிட வேண்டுகோள் வைத்தோம் இன்ஷா அல்லாஹ்.

மருதமுனையில் கைத்தறி நெசவை பார்த்தோம். பிற்பகல் ஒட்டுமாவடி வழியாக வாலச்சேனையில் நண்பர் நசீம் அவர்களை சந்தித்தோம். இங்கு முன்பு காயல்பட்டினத்தை பூர்வீகமாக கொண்ட எம்.கே.ஏ.அஹமது அன்ட் சன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த முஹிய்யத்தீன் அப்துல் காதர் அவர்கள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக 2004ம் வருடம் இருந்துள்ளார்.

அங்கிருந்து புனானையில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு மாகாண மேனாள் ஆளுநர் ஹிஜ்புல்லாஹ் அவர்கள் பல லட்சம் கோடி செலவில் கட்டப்பட்டு வரும்I International Campus for Science and Technology பல்கலைக்கழக பூங்காவை பார்த்து வியந்தோம்! பத்தாயிரம் மாணாக்கள் நவீன தொழில் நுட்பத்துடன் தங்கி படிக்கும் வசதிகள். இக்கல்வி கோந்திரத்தை துவங்கிய காலத்தில் பல்வேறு இன்னங்களை சந்தித்துள்ளார்.

original/img-20240707-wa0161
அனைத்தையும் கடந்து இந்த பல்கலைக்கழகத்தை எதிர்வரும் ஜூலை 20ம் தேதி இலங்கை ஜனாதிபதி திறந்து வைக்க உள்ளார்.  

(ஆளுமை மிக்க ஹிஜ்புல்லாஹ் )

காத்தான்குடியில் மஸ்ஜிதுல் அக்ஸா வடிவில் இறை இல்லம், இலங்கை முஸ்லிம்கள் வந்தேறிகள் அல்ல! நாட்டின் பூர்வீக குடிகள், நாட்டின் வளத்திலும், வளர்ச்சியிலும் ஆற்றியிருக்கும் பங்களிப்பு வரலாற்று தரவுகளுடன் நிரூபிக்கும் Srilanka Muslim Heritage Museum மற்றும் புனானையில் கல்விக் கண் திறக்கும் International Campus for Science and Technology University ஆகிய நிறுவனங்களை உருவாக்கிய ஆளுமை மிக்க ஹிஜ்புல்லாஹ் அவர்கைளை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைத்தோம், அவரிடமிருந்து பிரியா விடை பெற்றோம்.

( அரபு- தமிழ் முனைவர் மஜாஹிர் )

அங்கிலிருந்து அகுரனா செல்லும் வழியில் காயல் பெரியவர் கட்டா மரைக்கா காக்காவுடன் மாத்தலேயில் இரவு உணவு சாப்பிட்டோம். முன்பு மாத்தேலே நகரில் காயல்பட்டினத்தை சேர்ந்தவர்கள் 300 நபர்கள் வசித்துள்ளனர், இவர்களின் முயற்சியால் இறை இல்லம் உருவாக்கப்பட்டுள்ளதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது.

ஜூலை 5ம் தேதி காலை அகுரனாவில் அரபு-தமிழில் பாண்டித்தியம் பெற்ற கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் எஸ்.எம்.எம். மஜாஹிர் அவர்களுடன் கலந்துரையாடி விட்டு கண்டி அருகிலுள்ள மாவில்மலையில் மேனாள் அமைச்சர் எம்.ஹெச்.அப்துல் ஹலீம் எம்.பி.யை சந்தித்தோம்.

 வழியில் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தை பார்த்து மகிழ்ந்தோம்.ஜும்ஆ தொழுகை மற்றும் மதிய உணவிற்கு இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அவர்களது பூர்வீக ஊரான மாவனல்லாவில் ஏற்பாடு செய்து இருந்தார்.

original/img-20240707-wa0163பள்ளிவாசலில் தொழுது விட்டு ஊதுபத்தி, தீப்பெட்டி தொழிலில் முன்னணி நிறுவனமான SAPMAL நிறுவனர் கமாலுதீன் ஹாஜியார் இல்லத்தில் விருந்துன்று விட்டு அவரது தொழில் சாலையை சுற்றுப் பார்த்து வியந்தோம்.

இவர் இறை இல்லங்கள் மற்றும் சமுதாய முன்னேற்ற பணிகளுக்கு துணை நின்று வருவதை அறிந்து பிரார்த்தித்தோம்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த முன்னோடி காயல்பட்டினம் வாவு சித்தீக் ஹாஜியாரின் மகன் மாவனல்லாவை பிறப்பிடமாக கொண்ட அருமை காக்கா மௌலவி வாவு எம்.ஏ.எஸ்.பர்ஹான் ஆலிமை சந்தித்து கலந்துரையாடினோம்.

இரவு கொழும்பு சென்று காயல்பட்டினம் பல்லாக்கு குடும்பத்தை சேர்ந்த பி.எஸ்.கே.வி.ரபீக் காக்காவை மற்றும் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினோம்.

இலங்கை பயணம் வரலாற்று செய்திகளை அறிந்திடவும், ஆளுமைகளுடனான சந்திப்புக்கள் அனுபவங்களை பகிர்ந்திட அறிய வாய்ப்பாகவும் இருந்தது அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!ஜுலை 6ம் தேதி மாலை சென்னை திரும்பினேன்.

இப்பயண திட்டங்களை சிறந்த முறையில் ஒருங்கினைத்த இலங்கை நண்பர் முஹம்மது ஜெஸ்மீன், மணிச்சுடர் நாளிதழ் மூத்த ஊடகவியாளர் புத்தாநத்தம் சாகுல் ஹமீது, முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான், உடன் வருகை தந்த இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மது இப்ராஹிம் மக்கீ, இளைஞர் லீக் தெண் மண்டல ஒருங்கிணைப்பாளர் நெய்னார் முஹம்மது கடாபி ஆகியோருக்கு இதயம் நிறைந்த நன்றி.



- KAM முஹம்மது அபூபக்கர் Ex MLA

மாநில பொதுச் செயலாளர்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

VIDEOS

Recommended