ஒரே நாடு, ஒரே தேர்தல் முரட்டுத்தனமான அரசியலாகும் - துரைமுருகன் பேச்சு.
சுரேஷ் பாபு
UPDATED: Feb 18, 2024, 7:40:56 PM
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி மூலம் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுக வின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது.
கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏ க்களுமான ஆவடி சா.மு.நாசர், மாதவரம் எஸ்.சுதர்சனம், திருத்தணி எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன்,
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரப்போகிறது. இதனால், இவ்வளவு சீக்கிரம் தேர்தல் ஜூரம் வந்து விட்டது. தமிழக ஆளுநர் உரைக்கு பதில் அளிக்கும் போது 2 தீர்மானங்களை முதல்வர் கொண்டு வந்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முரட்டுத்தனமான அரசியலாகும், இந்தியா பல்வேறு மொழிகள், பழக்கவழக்கம் கொண்ட நாடாகும்.
2500 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையை கண்டுபிடித்தவன் தமிழன். அதனால் இதனை ஏற்க முடியாது.
மற்றொன்று பாசிசத்தை உள்ளடக்கியது என்பதால் அதை எதிர்ப்பதாகும், நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் உரிமையை பெறவும் என்பதை சுட்டிக்காட்டுகிற மற்றொரு தீர்மானமாகும். இதை சட்டப்பேரவையில் அனைத்து கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளாக இருப்பவர்கள் கூட தீர்மானத்துக்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் வலிமையான தீர்மானம் நிறைவேற்றியவர்.
Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி
இந்த தீர்மானங்கள் இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது. பிரதமர் மோடி காங்கிரஸில் இருப்பவர்கள் வாரிசு அரசியல் செய்வதாக பேசி வருகிறார். பாரம்பரியமான குடும்பங்களில் இருந்து வந்தவர்களை பார்த்து வாரிசு அரசியல் என்பதை ஏற்க முடியாது.
பல்வேறு தியாகங்களை செய்து தான் பதவிக்கு வந்தவர்கள் என்பதை மறக்க கூடாது. அதேநேரத்தில் பிரதமர் பதவி சோனியா காந்திக்கு தேடி வந்த போது அதை உதறித் தள்ளிவிட்டு, மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் பதவியை கொடுத்தவர்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தலாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
Also Read : சிவகாசி அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 10 பேர் பலி;முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம்.
முடிவில் நகர செயலாளர் சி சு ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான உதயமலர் பாண்டியன் ஆகியோர் நன்றி கூறினர்.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு, செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.