• முகப்பு
  • குற்றம்
  • ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற 3 சகோதரர்கள் போலீசார் மீது கொலை முயற்சி.

ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற 3 சகோதரர்கள் போலீசார் மீது கொலை முயற்சி.

இரா.பாலமுருகன்

UPDATED: Jun 1, 2024, 4:44:49 AM

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்களது அண்ணன் தலைமை காவலரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதால் போலீசார் அவரையும் கைது செய்தனர்

ஆலங்குளம் காவல் நிலைய சரகம் சிவலார்குளம் பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கடந்த 29.05.24 ம் தேதி அன்று சிவலார்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன்களான மகேஷ் (வயது 25), கஜேந்திரன் (வயது 22), பெர்லின் (வயது 24) மற்றும் மரிய சுந்தரம் என்பவரின் மகனான நவீன் (வயது 27) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஆலங்குளம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர்களான தங்கதுரை மற்றும் ஜான்சன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருந்த போது அங்கு வந்த கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அண்ணன் கல்யாண சுந்தரம் மற்றும் அவரின் நண்பர் நிர்மல் ஆகியோர் சேர்ந்து பணியிலிருந்த காவல் துறையினரிடம் தகராறு செய்து, அவர்களை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி செய்தும் தலைமை காவலரின் இருசக்கர வாகனத்தை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதுபற்றி ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ் குமார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று சிவலார்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகனான கல்யாணசுந்தரம் (வயது 27) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள சங்கர பாண்டியன் என்பவரின் மகன் நிர்மல்(வயது 28) என்ற குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended