ஏற்கனவே விபத்துக்குள்ளாகி தப்பிய இடத்திலேயே 3 மாதம் கழித்து மீண்டும் அதே இடத்திலே பேருந்து மோதி பலி
லட்சுமி காந்த்
UPDATED: Jun 17, 2024, 6:45:43 PM
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (41). இவருக்கு 5 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 8 வது கோட்ட பகுதியான செவிலிமேடு பகுதியில் ஒப்பந்த துப்புரவு மேற்பார்வையாளராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரை நத்தபேட்டை உரகிடங்கிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் சக்திவேல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பணி முடித்துவிட்டு செவிலிமேடு அருகே ஜெம் நகர் வழியாக பைக்கில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தபோது, காஞ்சிபுரத்திலிருந்து மதுராந்தகம் அச்சரப்பாக்கம் வழிதடத்தில் செல்லக்கூடிய SLNS என்கிற, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் விஜயகுமார் அவர்களின் பயணிகள் பேருந்து , எதிரே வந்த சக்திவேலின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே சக்திவேல் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடலை மீட்ட தாலுக்கா போலீசார் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விபத்தில் உயிரிழந்த சக்திவேல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தற்போது விபத்துக்குள்ளான அதே இடத்திலேயே விபத்துக்குள்ளாகி மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி தற்போது பணியில் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது குறிப்பிடதக்கது.
இந்த நிலையிலே மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சக்திவேலின் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.