• முகப்பு
  • குற்றம்
  • அசைவ ஹோட்டலில் ஆய்வுக்கு சென்ற சுகாதார பெண் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர்’ மீது கடை நிர்வாகத்தினர் தாக்குதல்.

அசைவ ஹோட்டலில் ஆய்வுக்கு சென்ற சுகாதார பெண் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர்’ மீது கடை நிர்வாகத்தினர் தாக்குதல்.

செந்தில் முருகன்

UPDATED: Jun 1, 2024, 5:00:00 AM

மயிலாடுதுறை நகராட்சி கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான எம்.எம். ஆர் வணிக வளாகத்தில் 32 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த வணிக வளாகத்தில் உள்ள பாய் வீட்டு கல்யாண பிரியாணி கடை வணிக வளாகத்தில் நடந்து செல்லக்கூடிய பகுதி மற்றும் கழிவறை மேல்தள பகுதியை ஆக்கிரமித்தும் திறந்தவெளியில் பிரியாணி சமைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் கணேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் இன்று நகராட்சி நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த அசைவ பிரியாணி ஹோட்டலில் ஆய்வுக்கு சென்றனர். ஹோட்டலில் உள்ளே நுழைந்தபோதே கொக்கியில் பிளாஸ்டிக் பைகள் மாட்டியிருந்ததை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா கைப்பற்றினார்.

அப்போது ஹோட்டலில் இருந்த அமர், அஃபீல் உள்ளிட்ட 20 பேர் வாக்குவாதம் செய்து சுகாதார ஆய்வாளர் பிருந்தா கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பிடிங்கியபோது கொக்கி மோதிரத்தில் மாட்டியதால் அலறியுள்ளார்.

இதனை பார்த்த நகரமைப்பு பிரிவு உதவியாளர் முருகராஜ் வந்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு ஹோட்டல் நிர்வாகத்தினர் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படும் நபர்கள் சமரசம் பேச நகராட்சிக்கு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.

தொடர்ந்து பணியில் இருந்த அதிகாரிகளை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நகராட்சி முன்பு நகராட்சி துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தி கடையை சீல் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக கூறி அழைத்து சென்றார்.

இதனிடையே அசைவ ஹோட்டல் பிரியாணி கடை திறப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அசைவ உணவகத்திற்கு காவல்துறை உதவியுடன் நகராட்சி உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்க அதிகாரிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். 

நகராட்சி அதிகாரிகள் காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாகவும் காரணமில்லாமல் கடையை பூட்டி சீல் வைப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து சீல் வைப்பதற்கு அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.

 

VIDEOS

Recommended