சட்டவிரோதமாக மது விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததால் கொடூரமாக தாக்கி கொலை.
மாரியப்பன்
UPDATED: May 8, 2024, 6:11:13 AM
Tamilnadu Distrcit News Online
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் கிராமத்தில் ஊட்டத்தூர் சாலையில் வசிப்பவர் ஆனந்த்குமார்(52) இவர் இதே பகுதியில் செருப்பு விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகே வசிப்பவர் சுரேஷ் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் வேலை செய்துள்ளார்.
அந்த வகையில் சட்டவிரோதமாக மது கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து தனது வீட்டில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
Peramblur Distrcit News Today
இதனால் மது வாங்குவதற்காக சுரேஷ் வீட்டுக்கு வருபவர்கள் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆனந்த் குமாரின் வீட்டின் கதவைத் தட்டி அடிக்கடி மது கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆனந்த்குமார் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் இதுகுறித்து பாடலூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கிராம சபை கூட்டத்திலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் சுரேஷ் குடும்பத்திற்கும் ஆனந்தகுமார் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை சுரேஷ் வளர்த்து வரும் நாய் ஆனந்த்குமாரின் வீட்டில் வாசலில் படுத்திருக்கும் பொழுது அதனை விரட்டி விட்டதில் இரு வீட்டிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மது விற்பனை செய்தது தொடர்பாக புகார் கொடுத்ததால் முன் விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த சுரேஷ்(45) அவரது மனைவி கீதா(44) அவரது மகன் கௌசிக்(17) மற்றும் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அரவிந்த்குமார்(17) ஆகிய நால்வரும் ஆனந்த் குமாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 08-05-2024
Online Perambalur District News in Tamil
ஒரு கட்டத்தில் ஆனந்தகுமாரை கற்களாலும் இரும்பு கம்பி மற்றும் கட்டைகளை கொண்டும் அடித்து தாக்கியதோடு, இரும்பு கம்பியால் மார்பில் குத்தியுள்ளனர்.
வெளியே ஓட முடியாதவாறு இரு வீட்டுக்கும் இடையே உள்ள சுமார் 2 1/2 அடி சந்து பகுதியில் வைத்து நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார் அதே இடத்தில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஆனந்த்குமாரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுரேஷ், அவரது மனைவி கீதா, மகன் கௌஷிக் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய நால்வரையும் கைது செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட ஆனந்த்குமாருக்கு கல்பனா என்ற மனைவியும், சந்தியா, காவியன் மற்றும் கீர்த்திகா என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தால் பாடாலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.