தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலில் மூழ்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்ட 14 இலங்கை மீனவர்கள் கைது.
செ.சீனிவாசன்
UPDATED: May 16, 2024, 8:44:52 PM
இந்தியா- இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற ரோந்து கப்பலில் கமாண்டர் பிரதீப் குமார் தலைமையில் ரோந்து சென்றனர்.
அப்போது கோடியக்கரைக்கு தென் கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்துக்கு இடமாக பைபர் படகுகள் நிற்பது தெரிய வந்தது.
இதனை கண்காணித்த போது ,இந்திய எல்லையில் சிலிண்டர் சுவாச கருவி மூலம் கடல் அட்டையை சிலர் பிடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் இலங்கையைச் சேர்ந்த 14 மீனவர்களை 5படகுடன் கைது செய்து நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு கொண்டு வந்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இலங்கை மீனவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை கிளி நொச்சியை சேர்ந்த அப்துல் ரசாக் முகமது நாசர் (51), மன்னார்தாள்பாட்டை சேர்ந்த சுகிதரன் (40), திரிகோணமலையை சேர்ந்த பைரூஸ் (44), ஜக்கூர் (49), தினுசன் (42), அலாம்தீன் (46), ரெங்கன் பிரானுன் (42), உவய்ஸ் (59), சுமித் சஞ்சீவ் (37), ரஞ்சித் இந்திகர் (38), இர்பான் (42), நவ்ஷாத் (42), பருத்தித் துறையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணான் (43), கொட்டன் தீவை சேர்ந்த அமிர்தகுமார் (44) ஆகியோர் என்பதும்,
தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இந்திய எல்லைக்குள் அத்துமீறி பிடித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடல் அட்டை இந்திய எல்லையில் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தடை விதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய எல்லையில் தடைவிதித்த கடல் அட்டையை பிடித்து கூடுதல் விலைக்கு சீனா போன்ற நாடுகளில் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து படகு மற்றும் கடல் அட்டை பிடிக்க பயன்படுத்திய உபகரணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நாளை (17ம் தேதி) ஆஜார் படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.