வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில், கடை கடையாக சென்று குட்கா விற்பனை செய்த வாலிபர்.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 22, 2024, 6:58:00 PM
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை போன்ற வஸ்துக்களை சில சமூக விரோத கும்பல்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து தமிழகத்தில் ஆங்காங்கே ஹோல்சேல் மற்றும் ரீடைல் கடைகளில் மறைமுகமாக வைத்து விற்கப்படுகிறது.
இதுதொடர்பாக உணவு கட்டுப்பாட்டு துறை மற்றும் காவல்துறையினர் அவ்வப்போது சோதனையிட்டு போதை பொருட்களைை பறிமுதல் செய்வதுபோல் பெயரளவிற்கு கணக்குக் காண்பித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு , வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலைகளை ஒருவர் பைக்கில் மறைத்து வைத்துக் கொண்டு கடை கடையாக சென்று விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் வாலாஜாபாத் ரவுண்டனா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, புகையிலை பாக்கெட்டுகளை பைக்கில் மறைத்து வைத்து கடைகளுக்கு சென்று விற்பனை செய்யும் நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 23-06-2024
விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் ஜாபர் அலிகான், பிகே செட்டி தெருவை சார்ந்தவர் என்பதும், போதை பாக்குகளை பெங்களூரில் இருந்து வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து கடை கடையாக பைக்கில் சென்று விற்பனை செய்து வருவதாகவும் கூறியதை தொடர்ந்து ,
அவருடைய வீட்டில் சென்று மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர் . பீரோ, கட்டில் உள்ளிட்ட பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1250 குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி ஜாபர் அலிகானை கைது செய்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.