• முகப்பு
  • குற்றம்
  • படுக்கை அறைக்குள் நுழைந்து பெற்றோர்களின் கண்முன்னே 20 வயது மகனை சரமாரியாக வெட்டி சாய்த்து கொலை.

படுக்கை அறைக்குள் நுழைந்து பெற்றோர்களின் கண்முன்னே 20 வயது மகனை சரமாரியாக வெட்டி சாய்த்து கொலை.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 14, 2024, 7:40:51 PM

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் கோதண்டம் சரிதா தம்பதிகள். கோதண்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஸராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களின் இரண்டு மகன்களும் பட்டபடிப்பு படித்துவிட்டு கஞ்சா மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டுவருகிறார்கள்.  

கஞ்சா விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மூத்த மகன் பார்வேந்தனின் உடன்பிறந்த தம்பியான சின்னையன் என்கின்ற உதயநிதி, தன்னுடைய நண்பரான படுநெல்லியை சேர்ந்த கிரி (22) என்பவருடன் சேர்ந்து ஏராளமான குற்றசெயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல் இவர்களுக்கு எதிர் கோஷ்டியாக விளங்கும் கோவிந்தவாடி பகுதியை சேர்ந்த பகவதி (எ‌) சஞ்சய், பிரேம்குமார், சாரதி ,கிஷோர் ,கோபி ,தட்சிணாமூர்த்தி ஆகியோர்களுடன், பார்வேந்தன் தரப்பு அவ்வப்போது முட்டிக் கொள்ளும் எனவும் கஞ்சா விற்பனை மற்றும் மணல் கடத்தலில் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பகவதி (எ‌) சஞ்சய், உள்ளிட்ட 6 வாலிபர்கள் கஞ்சா போதையில், உதயநிதியின் வீட்டுக்குள் நுழைந்து பெற்றோர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உதயநிதியை கண்டந்துண்டமாக வெட்டி விட்டு தப்பி ஓடியது சம்பவம் அக்கிராமத்தில் மிகுந்த பரப்பரப்பையும் பதட்டத்தையும் உண்டாக்கியது.

அது மட்டுமன்றி கோவிந்தவாடி அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் நுழைந்த இந்த கொலைகார கும்பல் , உதயநிதியின் நண்பனான 22 வயதுடைய கிரி என்ற இளைஞரையும் வெட்டி விட்டு தப்பி ஓடி தலைமறைவானது.

தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டு , குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் , பகவதி (எ‌) சஞ்சய், சாரதி ,கிஷோர் ஆகிய நான்கு பேரும் காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரை ஏரிக்கரையில் பதுங்கி உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து பாலு செட்டி சத்திரம் காவல் தறையினர் விரைந்து சென்று குற்றவாளிகளை சுற்றி வளைத்து மடக்கி கைது செய்தனர்.

அதேபோல இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த தட்க்ஷிணாமூர்த்தி மற்றும் கோபி ஆகிய இருவரும் வெம்பாக்கம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கொலை குற்றவாளிகள் ஆறு பேரையும் கைது செய்த காவல்துறையினர் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் 2 மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவிந்தவாடி பகுதியில் ரவுடிஸம், கஞ்சா ,மணல் கடத்தல் போன்றவற்றில் யார் பெரியவர் என கேங்க் வார் நடைபெற்று வருகிறது என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மிகவும் பிரசித்தி பெற்ற குரு கோவில் அமைந்துள்ள கோவிந்தவாடி கிராமத்தில் மேலும் எந்தவிதமான அசம்பாவங்களும் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் அப்பகுதியில் தொடர் ரோந்து செல்ல வேண்டும் எனவும் இப்பகுதியில் உள்ள இரு வேறு சமூகத்தை சேர்ந்த இளைய தலைமுறையினரை அழைத்து கவுன்சிலிங் அளிக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

 

VIDEOS

Recommended