பண்டாரவளை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை தாக்கிய எட்டு இ ராணுவ சிப்பாய்கள் கைது
ராமு தனராஜா
UPDATED: Sep 2, 2024, 10:30:38 AM
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
தியத்தலாவை இராணுவ முகாமியில் சேவையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய்கள், விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
ALSO READ | தமிழரசுக்கட்சியின் மத்திய குழு ஆரம்பம்
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய அலுவலக கடமையின் நிமித்தம் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அவ்வேளையில் ரயிலில் இருந்து இறங்கியுள்ள குறித்த இராணுவ சிப்பாய்கள், பாடல் பாடியுள்ளதுடன், கூச்சல் சத்தமும் எழுப்பியுள்ளனர். இதன்போது இவ்விடயத்தில் விழுந்திருந்த பணப் பையை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த தமிழ் இளைஞன் பணம் களவாடியுள்ளார் என் கூறி அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ALSO READ | 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த பலே திருடன்.
ரயில் நிலைய அதிபரும், அங்கிருந்தவர்களும் தாக்குதலை தடுக்க சென்றவேளை, அவர்கள்மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டு, அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் பண்டாரவளை ரயில் நிலைய அதிபர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஆகியோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இரு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.