வீட்டின் அறையில் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே இறப்புக்கு காரணம் என போலீசார் தகவல்
ஆனந்த்
UPDATED: Nov 15, 2024, 7:27:47 PM
சென்னை
குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு விசாலினி(6), என்ற மகளும், சாய் சுதர்சன் என ஒரு வயதில் மகனும் உள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவரது வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வீட்டில் எலிமருந்து வைக்க கூறியுள்ளார்.
இதன் பேரில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் மருந்தை அடித்து விட்டு வீட்டின் ஹால் மற்றும் சமையல் அறைகளில் எலிமருந்து வைத்துவிட்டு சென்றனர்
இதில் ஏற்பட்ட நெடியால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் மற்றும் மகன் இறந்து போன நிலையில் கணவன், மனைவி ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர்கள் தினகரன் மற்றும் சங்கர்தாஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமாரை தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில் பிள்ளைகள் இறந்து போன தகவலை அவரது பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.
இதனால் இறந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பெற்றோர் உடல் நலம் தேறி வந்த பிறகு அவர்களிடம் ஆவணங்கள் காண்பித்து கையெழுத்து பெற்ற பிறகு பிள்ளைகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுணர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலிமருந்தை பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
அவர்கள் பரிசோதனை முடிந்து ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக இரவில் வீட்டில் ஹால் மற்றும் சமையல் அறைக்கு யாரும் வர மாட்டார்கள் என வீட்டின் உரிமையாளர் கூறியதன் பேரில் ஊழியர்கள் மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் அளவுக்கு அதிகமான எலிமருந்து வைத்துவிட்டு சென்றது உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு அவர்கள் கொள்முதல் செய்யும் மருந்தின் தன்மையை ஆய்வு செய்யவும் வேளாண் துறையிடம் கடிதம் கொடுத்துவிட்டு விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தை சீல் வைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து பெற்றோர் உடல் நலம் தேறி வந்த பிறகே இறந்து போன பிள்ளைகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த பகுதியில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்பட்டுள்ளது.
மூன்று இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் கூடுதலாக அதிக அளவில் எலி மருந்து வைத்தது இந்த விபரீத சம்பவத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.