முழுமையான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
UPDATED: May 8, 2024, 9:34:00 AM
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றி அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணி இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து வருவதனால் இலங்கைக்கு பல சலுகைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
“அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பேணுவதுடன் அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவு முறையை இலங்கை பேணி வருகிறது. இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து ஒவ்வொரு நாட்டுடனும் சிறப்பான தொடர்புகளைப் பேணுவது, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பதை எளிதாக்கியது.
சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் ஆகியவை கடன் மறுசீரமைப்பிற்கு பெரும் ஆதரவை வழங்கின. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும்.
சீனாவுடனும் இந்தியாவுடனும் எமக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்த முடிந்துள்ளது. சீனாவுடன் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய அதானி நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் இலங்கையில் முதலீடுகள் செய்வது குறித்து சவுதி அரேபியாவும் கவனம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது எரிபொருள் சார்ந்த பொருளாதாரத்தை தாண்டி ஏனைய நாடுகளில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றன. அதனை இலங்கைக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு சர்வதேச விதிகளுக்கு அமைய வெளிநாடுகளுடன் உறவுகளைப் பேணி வருவதால், ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஈரான் வழங்கிய உமா ஓயா திட்டமானது அடுத்த மாதம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் 120 மெகாவொட் மின்சாரத்தை வழங்கும். இதன் மூலம் அடுத்த மாதம் மின்கட்டண திருத்தத்தின் போது இதன் பலன் மக்களுக்கு கிடைக்கும்.
இலங்கையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டுமாயின், விசா கட்டணத்தில் கவனம் செலுத்தாமல், சுமார் ஐம்பது நாடுகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும். இதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கலாம்.
கடந்த வாரம் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றத்திற்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் தொடங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.
தற்போது மியான்மாரில் உள்ள இளைஞர்களைக் காப்பாற்ற இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சட்டபூர்வமற்ற முறையில் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் சார்ந்த கூலிப்படைக்கு அனுப்பப்பட்டுள்ள நமது இளைஞர்களை காப்பாற்ற இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் பாதுகாப்புப் படையினருடனும் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது” என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.