தேசிய சிறுபான்மை இனங்களுக்கு அதிகார பகிர்வு அவசியம் உதயசூரியனின் தெரிவுக்குக் காரணம் அதுவே என்கிறார் - திலகர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 28, 2024, 8:37:11 AM
இலங்கையில் அமைய பெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மக்களாக இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு அவசியம் இல்லை என்ற கொள்கையை வெளிப்படுத்தி இருக்கின்றது.
இத்தகைய சந்தர்ப்பத்தில் தேசிய சிறுபான்மையினர்களான இலங்கைத் தமிழர்,முஸ்லிம்கள், மலையகத்தமிழர் ஆகிய இன மக்களுக்கு இந்த நாட்டில் அதிகார பகிர்வு அவசியம் என்பதை வலியுறுத்துவதாக வடகிழக்கு மாகாணங்களிலே இலங்கைத் தமிழர்களை முன்னிறுத்தியும் கண்டி மாவட்டத்திலே முஸ்லிம்களை முன்னிறுத்தியும் நுவரெலியா மாவட்டத்திலே மலையகத் தமிழர்களை முன்னிறுத்தியும் உதயசூரியன் சின்னத்தில் ஐக்கிய கூட்டணியாக போட்டியிடுகின்றோம் என உதயசூரியன் சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் ஐக்கிய கூட்டணியாக போட்டியிடும் மலையக அரசியல் அரங்கத்தின் வேட்பாளர்களின் அறிமுகம் நேற்று நுவரெலியா நகரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இடம்பெற்றது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் நோக்கங்களையும் கொள்கைகளையும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர் .
இதன் போது கருத்து தெரிவித்த உதயசூரியன் சின்னத்தின் தலைமை வேட்பாளரும் மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபருமான மயில்வாகனம் திலகராஜா கருதுத் தெரிவிக்கையில்,
மலையகத்தில் கூட்டணி அரசியலை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் கூட்டணி மூன்று கட்சிகளின் சின்னத்தையும் ஒரு கூட்டணியின் சின்னத்தையும் கொண்டு இருக்கின்ற போதும் கூட எந்த ஒரு தேர்தலிலும் அந்த கூட்டணியில் சின்னத்தில் தேர்தலில் களம் இறங்காது கேலிக்குரியது.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழுகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதியாக தங்களை அடையாளம் காட்டுவோர் பிரதேச சபை தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரை பெரும்பான்மை தேசிய ஊட்டணிகளில் தொங்கும் கட்சிகளாக இருக்கின்றவே தவிர மலையகத்தமிழ் மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு கூட்டணியாக இன்று வரை செயல்படாதது கவனத்திற்குரியது.
இந்த நிலையில் தான் மலையக அரசியல் அரங்கம் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் மூன்று தேர்தல்களிலும் தனித்துவமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதமாக
மலைய மக்களின் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.நடைபெறுவதாக அறிவித்து நிறுத்தப்பட்டு இருக்கும் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலிலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியதுடன்,
நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் 11 வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தின் கீழ் களம் இறக்கி உள்ளோம்.
இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றம் என்பது மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை பறிப்புக்கு எதிராக உருவானது என சொல்லப்பட்ட போதும் கூட இன்று தமிழரசு கட்சி மலையைகத் தமிழ் மக்களின் மீட்சிக்கான எந்த ஒரு வேலை திட்டத்தையும் முன்வைத்ததாக இல்லை.
ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பதாகவே தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் இணைந்து மட்டுமல்லாமல் அப்போதைய மலையக மக்களின் பிரதிநிதியாக இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணி. எனவே தமிழர் விடுதலை கூட்டணி என்கின்ற கூட்டணி கட்சியானது மலையகத்தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து தான்.
இந்த நாட்டில் தனித்துவமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் எண்ணிக்கை சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களை ஒன்றிணைத்து உதயசூரியன் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி,கண்டி நுவரெலியா மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.
இன்று ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அதிகார பகிர்வுக்கான அவசியமில்லை என கூறிவரும் சமயத்தில் அதற்கு மாறாக சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் உதயசூரியன் கூட்டணி கட்டாயமாக எதிர்வரும் பாராளுமன்றில் எதிர்கட்சி வரிசையில் இருக்க வேண்டும்.
எனவே தேர்தல் காலங்களில் மாத்திரம் புற்றீசல்கள் போலவரும் கட்சிகள், குழுக்களுக்கு மாறாக தேர்தல் அல்லாத காலத்திலும் மலையக அரசியலில் முழு நேரமாக இயங்கிவரும் மலையக அரசியல் அரங்கத்துக்கு குறைந்தபட்சம் ஒரு ஆசனத்தை வழங்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.
அப்படி அமையும் பட்சத்தில் அந்த அணியில் இருந்து 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்கிக் காட்டும் திடமான நிகழ்ச்சித் திட்டம் அரங்கத்திடம் உண்டு எனவும் தெரிவித்தார்.