ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை மீறாவோடையில்
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Nov 22, 2024, 10:42:30 AM
அரசாங்கத்தினால் மக்களின் காலடியில் சேவையை கொண்டு செல்லும் திட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த முதலாவது நடமாடும் சேவை மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரனையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் பதிவாளர் நாயக திணைக்களத்துடன் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை மீறாவோடை கிழக்கு, மீறாவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை கிராம சேசவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் யூ.கே.எம்.அப்துல்லாஹ், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், மீறாவோடை மன்உல் ஹூதா அரபு கல்லூரியின் இஸ்தாபகர் மௌலவி எல்.ரீஎம்.இஸ்ஹாக், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்களாளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், மீறாவோடை மீறா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு மற்றும் காலங்கடந்த பதிவு, காணி, அசுவசம, சமுர்த்தி, சமுக சேவைகள் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களம், கிராம அபிவிருத்தி திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமூக வலுப்படுத்தல் திணக்களம், மத்தியஸ்த சபை, பொலிஸ் திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கி இருந்தனர்.
இதன் போது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமுக வலுப்படுத்தல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் முயற்சிக்காக திரிய மங்பெத்த திட்டத்தில் குழு செயற்பாட்டிற்காக மூன்று தையல் இயந்திரங்களும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மூன்று மாணவர்களுக்கும் பெண் தொழில் முயற்சியாளர்கள் ஒன்பது பயனாளிகளுக்கு ஒருவருக்கு இருபதாயிரம் ரூபா வீதம் வட்டியில்லா கடனாகவும், கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் பதினெரு பயனாளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா வீதமும் வட்டியில்லா கடனாக வழங்கி வைக்கப்பட்டது.