ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக செயற்ப்பட வேண்டும்
வவுனியா
UPDATED: Apr 30, 2024, 7:31:23 AM
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாளைய தினம் தொழிலாளர் தினமாகும். தொழிலில் ஈடுபட்டு எங்களது உறவுகளை கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதனால் நாங்கள் அவர்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம்.
தற்போது உழைப்பாளி என்ற வர்க்கத்தில் நாங்கள் இல்லாமல் கையேந்தும் வர்க்கத்தில் உள்ளோம். எனவே எங்களது உறவுகளை மீண்டும் எமக்கு திருப்பித் தர வேண்டும் என்பதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் எமக்கான நீதியினை பெற்றுத்தராமல் சர்வதேசமும் தொடர்ச்சியாக எங்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது. என்றாலும் கூட எங்களது உறவுகளுக்கான சர்வதேச நீதியை பெற்று தர வேண்டும்.
அத்தோடு எமது உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக உள்ளது.
தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே, போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.